×
 

7 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் டி20: இங்கிலாந்து பேட்டர்களை கலங்கடிப்பார்களா இந்திய ஸ்பின்னர்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது.

கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 132 ரன்களில் இங்கிலாந்து பேட்டர்கள் சுருண்டனர்.
இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த தொடரை சமன் செய்ய சென்னை ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் ஜாஸ் பட்லர்(68) மட்டும் நிலைத்து ஆடாமல் இருந்தால், அந்த அணியின் ஸ்கோர் 70 ரன்களுக்குள் முடிந்திருக்கும். ஏனென்றால் பில்சால்ட், பென் டக்கெட், லியாம் லிவிங்ஸ்டோன், பெத்தெல் உள்ளிட்ட மற்ற வீரர்கள் சேர்ந்து 53 ரன்கள்தான் சேர்த்தனர், இந்திய அணி வழங்கிய உதிரிகள் 11 ரன்களைச் சேர்த்தால் 132 ரன்கள் எனும் கவுரவமான ஸ்கோரை இங்கிலாந்து எட்டியது.

இந்திய அணியின் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து முதல் ஆட்டத்தில் 12 ஓவர்களில் 67 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை நினைவுபடுத்தியிருக்கும்.

இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா.?


பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா,அக்ஸர் படேல் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதேபோன்று கடந்த கொல்கத்தா ஆட்டத்தில் வருண், அக்ஸர், பிஸ்னோய் மூவரும் இங்கிலாந்து தோல்விக்கு காரணமாகினர்.
சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2018ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டி நடந்தது. அந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் நிர்ணயித்த 182 ரன்கள் எனும் இலக்கை இந்திய அணி கடைசிப்பந்தில் சேஸ் செய்தது. 

அதற்கு முன்பாக கடந்த 2012ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டி நடந்துள்ளது. ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் 2018ம் ஆண்டிலும், 7 ஆண்டுகளுக்குப்பின் இன்றும் சர்வதேச டி20 போட்டிநடக்கிறது. 2012ம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில ஒரு ரன்னில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 
அப்போது நியூசிலாந்து அணிக்கு பிரெண்டென் மெக்கலம்தான் கேப்டனாக இருந்து, 91 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாகினர். அப்போது கேப்டனாக நியூசிலாந்துக்கு வெற்றி தேடித்தந்த மெக்கலம் இன்று பயிற்சியாளராக இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுப்பாரா என்பதை பார்க்கலாம்.


சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி
சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகம் என்பது நம்பிக்கை, ஆனால், 2024 ஐபிஎல் சீசனில் தலைகீழாக மாறி வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் ஒத்துழைத்தது, அதேஅளவு பேட்டர்ளுக்கும் ஒத்துழைத்தது. 18 இன்னிங்ஸ்களில் 74 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர், சுழற்பந்துவீச்சாளர்கள் 25 விக்கெட்டுகள்தான் சாய்த்தனர். 
முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 175 ரன்கள்வரை சேர்க்கலாம், ஆனால் பந்துவீச்சின்போது பனிப்பொழிவு ஆட்டத்தை சேஸிங் செய்பவர்களுக்கு சாதகமாகவும், வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கும்.

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில்தான் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்துக்கு தயாராவார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் 4 வேகப்பந்துவீச்சாளர்ளை களமிறக்கி இங்கிலாந்து கேப்டன் பட்லர் கையை சுட்டுக்கொண்டார். 
ஆதலால், இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்துவீ்ச்சாளர்களுக்கு இங்கிலாந்து அணி முக்கியத்துவம் அளிக்கும். ஜேக்கப் பெத்தெலுக்கு உடற்தகுதி பிரச்சினை இருப்பதால் அவருக்குப் பதிலாக ஜேமி ஸ்மித் முதல் போட்டியில் அறிமுகமாகலாம்.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்திக்கும்,வாஷிங்டன் சுந்தருக்கும் சொந்தமைதானம் என்பதால், இருவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரிகிறது. 
முகமது ஷமி உடல்நிலையை பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்கல் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஷமி முழுமையான உடல்தகுதியுடன் இருந்தால்இன்றைய ஆட்டத்தில் பார்க்கலாம்.
அதேபோல இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு கனுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. ஒருவேளை உடற்தகுதியை அபிஷேக் பெறவில்லை என்றால் அவருக்குப்பதிலாக துருவ் ஜூரெல் களமிறங்கலாம்.

 
பேட்டிங்கில் சமபலம்
பேட்டிங்கைப் பொருத்தவரை இந்திய அணிக்கு எந்த வகையிலும் சளைக்காத வகையில் இங்கிலாந்து அணியிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்டர்கள் உள்ளனர்.
 பில் சால்ட், டக்கெட், லிவிங்ஸ்டோன், பட்லர், ப்ரூக் என ஆட்டத்தை திருப்பக்கூடிய வலிமையான அதிரடி பேட்டர்கள். இந்திய அணியில் சாம்ஸன், அபிஷேக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் ரெட்டி, அக்ஸர் படேல் என பேட்டர்களும்உள்ளனர். 
இங்கிலாந்து அணி(உத்தேசம்)
பில்சால்ட்(விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜாஸ் பட்லர்(கேப்டன்), ஹேரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல் அல்லது ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் அல்லது பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் உட்
இந்திய அணி(உத்தேசம்)
சஞ்சு சாம்ஸன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா அல்லது துருவ் ஜூரெல், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங்,  அக்ஸர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், அல்லது முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி

இதையும் படிங்க: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா? ஐசிசி போட்டோஷீட் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share