பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் என்றால் அவர்தான் சல்மான் கான். இவரது படங்களில் பெரும்பாலும் எதிரிகளை அடித்து துவைத்து காற்றில் பறக்க விடுவார். இவரை கண்டாலே வில்லன்கள் நமக்கு எதுக்குடா வம்பு என பத்தடி தூரம் நகர்ந்து சென்று விடுவார்கள். இப்படி பட்ட மனிதனை நிஜவாழ்க்கையில் பாடாய் படுத்தி வருகிறது ஒரு கூட்டம். எதிரிகளை பறக்க விடுபவரை காரில் பறக்கவிடுவோம் என்கிறது. சினிமாவில் வில்லன்களை ஓட விட்டவரை வீட்டிலிருந்து கூட வெளியே ஓடமுடியாத அளவிற்கு உயிர் பயத்தை காண்பித்து ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்துள்ளது அந்த கூட்டம்.

அப்படி என்ன தான் பிரச்சனை சல்மான் கானுக்கும் அந்த கூட்டத்திற்கும் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம். சமீபத்தில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'சிகந்தர்' திரைப்படம் ஈத் பண்டிகையின் போது அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ஆனால் வசூலில் பெரிய அளவிற்கு வெற்றி இல்லை.
சிகந்தர் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தியாவில் மட்டும் ரூ.109 கோடி வசூலித்துள்ளது. இதனால் படம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த படத்தை வெற்றிகரமாக எடுக்க முடியாமல் போனதற்கு நடிகர் சல்மான்கான் தான் காரணம் என பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் இவருக்கு வரும் கொலை மிரட்டல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி போய் கொண்டே இருந்தது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிக்கந்தர் பட தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம்...! முருகதாஸ் அல்ல... பிரபல பத்திரிகையாளர் பேட்டி...!

இன்று வரை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வர காரணம் அவர் வேட்டையாடிய ஒரு மானால் வந்தது என்றால் நம்ப முடியுமா.. ஆம்.., கடந்த 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்ற சல்மான் கான், மான்களை வேட்டையாடியதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். பின் இந்த வழக்கில் சிறப்பு ஜாமீன் பெற்று வெளியே வந்த சல்மான்கான் இனி எந்த சட்ட பிரச்சனையும் வராது என நினைத்தார். ஆனால் ஒரு மானை சுட்டு இன்று வரை அவஸ்தை படுகிறார்.
ஏனெனில் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அவர் கொன்ற 'கருங்காட்டு மான்' மிகவும் புனிதமானது என கூறப்படுகிறது. ஆதலால் அந்த சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க நினைத்தால் சல்மான்கான் உடனே ராஜஸ்தானுக்குச் சென்று 'கருங்காட்டு மானைக் கொன்றதற்காக' மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் கொல்லப்படுவார் என பகிரங்க மிரட்டல் விடுத்து இருந்தார். இதற்கு ஏற்றார் போல் நீதிமன்றமும் சல்மான் கான் வேட்டை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோர்ட்டே சொல்லிவிட்டது இனி என்ன பிரச்சனை வர போகிறது என நினைத்த சல்மான் கானுக்கு அதன்பின் சோதனை காலம் ஆரம்பமானது. கடந்த ஆண்டு சல்மான் கான் வீட்டில் நிம்மதியாக உறங்கி கொண்டு இருக்க, பிஷ்ணாய் கும்பலைச் சேர்ந்த சில நபர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பதறிப்போன சல்மான் கான் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவருக்கு 11 காவலர்கள் மற்றும் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இப்படி அவருக்கு பல பாதுகாப்புகளை அரசாங்கம் கொடுத்து வந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அவரை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதுடன் கொலை மிரட்டல்களும் வந்த வண்ணமே உள்ளனர். இந்த நிலையில், இன்று சல்மான் கானுக்கு அறியப்படாத நபர் ஒருவரிடமிருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், "தனது குடும்பத்துடன் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் சல்மான்கானை அவரது வீட்டில் வைத்து கொலை செய்ய உள்ளதாகவும் அவர் செல்லும் காரை பாம் வைத்து வெடிக்க வைப்போம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் பதறிப்போன போலீசார் இது உண்மையிலேயே பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர்களின் வேலைதானா..? அல்லது வேறு யாரேனும் விளையாடுகிறார்களா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளியான இரண்டே நாளில் ரூ.100 கோடியை கடந்த "சிக்கந்தர்"...! மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்..!