அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக பார்க்கப்பட்டு வரும் தொடர் சுழல்-2. கடந்த 2022-ல் வெளிவந்த சுழல் தொடரின் முதல்பாகத்தை ஏறத்தாழ பெரும்பாலானோர் மறந்துவிட்ட தருணத்தில் தங்கள் கதையை நம்பி இதனை வெளியிட்டுள்ளனர் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி.

முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதாக கதை முடிந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறையில் இருப்பது போலவும், அவரை வெளியே கொண்டு வர முயற்சிக்கும் வழக்கறிஞராக வேடத்தில் லால் நடிப்பதாகவும் கதை ஆரம்பிக்கிறது. சிறிது நேரத்திலேயே லால் மர்மமாக கொல்லப்பட, அவரை தாங்கள் தான் கொன்றோம் என்று 8 இளம்பெண்கள் காவல்நிலையத்தில் சரண் அடைகின்றனர். விசாரணை அதிகாரியாக முதல்பாகத்தில் இருந்த கதிர், இந்த பாகத்திலும் தனது விசாரணையை தொடர்கிறார். இறுதியில் யார் உண்மையான குற்றவாளி? என்பதாக கதை முடிகிறது.
இதையும் படிங்க: ரூமுக்கு அழைத்த இயக்குனர்.. ஒரு நொடியில் அத்துமீறல்.. நடிகையின் பேச்சால் பதற்றம்..!

கன்னியாகுமரியின் கடலோர மாவட்டத்தையும், குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழாவையும் கதையின் களமாக தேர்ந்தெடுத்திலேயே சுழல் சபாஷ் போட வைக்கிறது. கதையில் பிரதான கதாபாத்திரங்கள் பலர் இருந்தாலும் பெயரறியாத நூற்றுக்கணக்கான துணைநடிகர்களின் பங்களிப்பே சுழல்-2 தொடரின் பலம். கடவுள்களின் வேடங்களில், சாமியாடிகளாக, பக்தர்களாக, பூசாரிகளாக திரை முழுவதும் ஆக்ரமித்து நம்மை அட போட வைக்கின்றனர். குறிப்பாக அரக்கனை அழிப்பதாக 2 குறுநாடகங்கள் இந்த தொடரில் வருகின்றன. அதில் நடித்துள்ள அந்த நடிகர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அண்டர்ப்ளே என்று கூறுவார்களே அதற்கு உதாரணமாக இறுக்கமான முகத்துடனும், குறைவான வசனங்களுடனும் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லா உணர்வுகளுக்கும் ஒரேமாதிரியான முகபாவத்துடன் இஸ்திரி செய்த உடையோடும், நடையோடும் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் கதிர். குறைவாகவே வந்தாலும் படத்தின் மைய கதாபாத்திரமாக மாறி நிற்கிறார் லால். பருத்தி வீரன் சித்தப்பா சரவணன், இதில் மூர்த்தி என்ற இன்ஸ்பெக்டர் வேடம். மது அருந்தியபடியே காவல்துறைக்குள் அடியெடுத்து வைத்தபோது தான் எப்படிப்பட்ட கனவுகளோடு வந்தேன் தெரியுமா என்றும், வில்லி சரோஜா தன்னை விரும்புகிறாள் அவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன் என்று கூறும் காட்சியிலும் சரவணன் அதகளம் செய்து விட்டார். அருமையான நடிப்பு.. அஷ்டகாளி திருவிழா நடக்கும் காளிப்பட்டினத்தில் அரக்கனை அழிக்கும் எட்டு பெண்கள் கதாபாத்திரங்களாக கௌரி கிஷன், மோனிஷா பெஸ்ஸி, சம்யுக்தா, ஹரிணி, நிகிலா, ஸ்ரீஷா, கலைவாணி, அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் முத்து வேடமேற்று இருக்கும் கௌரி, முப்பி வேடமேற்று இருக்கும் மோனிஷா ஆகியோர் அபாரம்..

எம்ஜிஆர் ஆற்றல்மிக்கவராக தெரிய வேண்டும் என்றால் அதற்கு நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், பி.எஸ்.வீரப்பா போன்ற அசுர வில்லன்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் வலிமையான வில்லனை வீழ்த்தி கதாநாயகன் வெற்றி பெறும்போது நமக்கும் சந்தோஷம் பற்றிக்கொள்ளும். இந்த தொடரில் பாதிக்கப்பட்ட பெண்களாக 8 பேர் உள்ளனர். போதாக்குறைக்கு கதிர், ஐஸ்வர்யா ஆகியோரும் வில்லனை தேடி வருகின்றனர். அப்படியெனில் அந்த வில்லன் கதாபாத்திரம் எவ்வளவு வலிமையானதாக இருக்க வேண்டும்.

கொல்லப்பட வேண்டியவன் அரக்கன் அல்ல அரக்கி என்று கதையில் வில்லன் கதாபாத்திரத்தில் வருவது வில்லி சரோஜா என்று கூறும்போது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் சிறிது நேரமே வந்தாலும் தனது அசத்தல் நடிப்பாலும், இனம்புரியாத கவர்ச்சியான கண்கள் மற்றும் முகத்தால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் சரோஜா வேடத்தில் நடித்துள்ள அர்ஷியா லட்சுமணன். ஆம், இந்த கொடூரமான காரியத்தை இந்த பெண் செய்திருக்கக் கூடும் என்று பார்ப்பவர்கள் நம்பவேண்டும்.. சரோஜா வேடத்தில் வரும் அர்ஷியா அதனை செய்யும்போது நம்மால் நம்ப முடிகிறது. சுழல்-2 தொடர் யாருக்கு திருப்புமுனையை தந்துள்ளதோ என்னவோ, அர்ஷியா என்ற சிறந்த நடிகையை தந்துள்ளது.
வசனங்களும், சாம் சி.எஸ். இசையும் பக்கபலம். ஆப்ரஹாம் ஜோசப்பின் ஒளிப்பதிவு நம்மை திருவிழாவுக்கு நடுவில் கொண்டு போய் நிறுத்துகிறது. மொத்தத்தில் சுழல், மென்மையாக சுழல ஆரம்பித்து புயலாக முடிகிறது.
இதையும் படிங்க: சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!!