"காண கந்தர்வன்" என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.ஜே. யேசுதாஸ், தமது 50 ஆண்டுகள் திரை வாழ்வில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம், ஆகிய இத்தனை மொழிகளிலும் தனது பாடலை பாடி அசத்தியிருப்பதோடு உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை வைத்திருப்பவர்.

இவர் தனது வாழ்நாளில் இதுவரை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் மேற்குவங்க அரசுகளிடம் 45 முறை விருதுகளை பெற்று உள்ளார். இதுவரை எந்த பாடகர்களும் சந்திக்காத வகையில், எட்டு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஐந்து முறை பிலிம்பேர் விருதுகளும், இந்திய அரசால் 1975ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002ல் பத்மபூஷன் விருதும், மீண்டும் 2017ல் பத்மபூஷன் உயர்ந்த சிவில் விருதும் பெற்றவர்.
இதையும் படிங்க: கூலி படத்தில் "பூஜா ஹெக்டே".. அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

இவர், மலையாளத் திரைப்படமான "கால் பாடுகள்" என்ற திரைப்படத்தின் மூலம் 1960ல் தனது முதல் பாடலை சினிமா உலகில் படைத்தார். அதன்பின் "நீயும் பொம்மை,நானும் பொம்மை" என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அது மட்டுமல்லாது ஏவி.எம் ஸ்டுடியோவில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய பெருமை யேசுதாஸ் அவர்களையே சேரும்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் வசித்து வரும் கே.ஜே.யேசுதாஸ், உடல் நலக்குறைவு காரணமாக திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் வேதனையின் உச்சத்திற்கு சென்றனர். இதனை தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாடகர் யேசுதாஸ், தற்போது நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும், பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் சற்று பெருமூச்சு விட்டிருக்கும் ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது என்ற தகவலை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். மருத்துவமனை தரப்பிலும் விரைவில் அதற்கான அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டிரீமிங்கில் டாப் 10 இல் இருக்கிறது "லக்கி பாஸ்கர்".. 13 வாரங்களை கடந்து புதிய சாதனை...!