2025 பிறந்ததையொட்டி தன்னுடைய எக்ஸ் (அதாங்க ட்விட்டர்) பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அவருடைய சூப்பர் டூப்பர் ஹிட்டான பாட்ஷா படத்தின் வசனமான "" நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான்... கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்... புத்தாண்டு வாழ்த்துகள் "" அப்படினு பதிவு போட்டு இருக்கார்.
இதே பாட்ஷா வெற்றி விழாவில் தான் தன்னுடைய அரசியல் விளையாட்டை ஆரம்பித்தார் சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என்று அரசியல் திரியை பற்ற வைத்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அந்த வெடி எப்போது வெடிக்கும் என்ற பதைபதைப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்தது எல்லாம் மிகப்பெரிய சாமர்த்தியம்.

அவரது ஒவ்வொரு புதுப்பட வெளியீட்டின் போதும் ஏதேனும் ஒரு அரசியல் சாயம் உள்ள பாடலோ, வசனமோ இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார். ஒருவேளை அந்த கட்சியை எதிர்க்கிறாரோ, ஒருவேளை இந்த கட்சியை எதிர்க்கிறாரோ என்றெல்லாம் தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு பொடி வைத்து பேசிவிட்டு பிறகு தனக்கே உரித்தான ஹாஹா என்று சிரித்து விட்டு சென்று விடுவார்.
இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?
ரஜினி பெரிதும் மதித்த இரண்டு அரசியல் ஆளுமைகளான கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். அந்த காலகட்டத்தில் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வந்து விடுவார் என்றே அனைவரும் கணித்தனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் தனது பாதை ஆன்மிக அரசியல் என்று 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் அறிவித்தார் ரஜினி. அடடா இது என்ன புது சரக்கா இருக்கே என்று அரசியல் நோக்கர்களே வியந்து போயினர். கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு கொள்கையா தலையே சுத்திடுச்சு என்று கூறி எல்லோரையும் திடுக்கிட வைத்தார்.

ஆனால் திடீரென உடல்நலத்தை காரணமாக கூறி 2020-ம் ஆண்டு தனது அரசியல் நாடகங்களுக்கு முடிவுரை எழுதினார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தனது ரசிகர்களையும், நடுநிலை வாக்காளர்களையும் அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி கூறியே நம்ப வைத்ததற்கும் ஒரு தைரியம் வேண்டும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவர்களிடமே கூறுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். எப்படியோ ஒருவழியாக அவரது அரசியல் பயணம் ஆரம்பிக்காமலேயே முடிந்தது.
ஆனால் பாருங்கள், அதே திரைத்துறையைச் சேர்ந்த சீமான், நாம் தமிழர் என்ற கட்சியை 2010-ம் ஆண்டு தொடங்கி 14 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நாற்காலியே இலக்கு என ஓடிய நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் தமிழ்நாடே வியந்து போகுமளவுக்கு மாநாட்டையும் நடத்திக் காண்பித்தார். இவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொன்னார் ரஜினிகாந்த்.
ஆனால் பாருங்கள் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அவ்வப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் என இந்த திரி இன்னும் எரியுமோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுவார்.

இந்த சூழ்நிலையில் தான் ரஜினியின் இந்த புத்தாண்டு செய்தியை அணுக வேண்டி இருக்கிறது. வெறுமனே வாழ்த்து சொல்லாமல், நல்லவன் - கெட்டவன் என்ற இருதுருவ அரசியலை நைச்சியமாக பேசவேண்டிய அவசியம் என்ன?. அப்படியென்றால் யாரை அவர் கெட்டவன் என உருவகப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? என்னங்க நீங்க, ஒரு வாழ்த்துச் செய்திக்கு அக்கப்போரா? என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தால், ஏங்க சொன்னது சூப்பர் ஸ்டாருங்க.. அப்படியெல்லாம் சும்மா வுட்ற முடியாது..
ஹலோ சூப்பர் ஸ்டார், யார் அந்த கெட்டவன் கொஞ்சம் ஓபனா சொல்லுங்க..
இதையும் படிங்க: இனி கண்ணாடி பாலம் பார்க்க கன்னியாகுமரி போக வேண்டாம், சென்னையிலேயே...