டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறாமல் ஹாட்ரிக் பூஜ்ஜியத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2013ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வென்றது. அதன்பின் 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை.
2025ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலாவது ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட முன்னணியில் இல்லை.

2013ம் ஆண்டோடு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது, 2014ம் ஆண்டோடு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரமும் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 3வதுமுறையாக ஒரு தேர்தலில் கூட ஒரு தொகுதியில் கூட ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாமல் ஹாட்ரிக் பூஜ்ஜிய நிலையை காங்கிரஸ் தலைகுணிவோடு காத்திருக்கிறது.
இதையும் படிங்க: டெல்லி: முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த10 தொகுதிகளில ஆம் ஆத்மி முன்னிலை
ஒரு காலத்தில் டெல்லியிலும், தேசியத்திலும் ஆண்ட கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இன்று டெல்லியில் மக்களால் துடைத்தெறியப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு சதவீதமாகச் சரிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி டெல்லியில் தொடர்ந்து 3 தேர்தலிலும் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாமல் போகவும், வாக்கு சதவீதம் சரிந்து மோசமாகவும் என்ன காரணம் என்பது குறித்து சிறிய அலசல்.
ஆம் ஆத்மி வருகை
டெல்லி மக்களுக்கு பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளைத் தவிர்த்து மாற்று சிந்தனை, மாற்றுக் கொள்கைகளோடு புதிய கட்சியை எதிர்பார்த்த தருணத்தில்தான் ஊழல் ஒழிப்பு என்ற கோஷத்தோடு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்.

இங்கிருந்துதான் காங்கிரஸ் கட்சியின் சரிவு தொடங்கியது. 2013ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அடியெடுத்த வைத்த ஆம்ஆத்மி கட்சியை முதல் தேர்தலிலேயே மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர், கடந்த 5 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 43 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்கள்தான் கிடைத்தது. இதுதான் கடைசியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு சதவீதத்தில் 15 சதவீதத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்தது. ஆம் ஆத்மி கட்சி முதல்தேர்தலிலேயே 30 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெற்றது
2015, 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு இன்னும் மோசமாகி, பூஜ்ஜியம் தொகுதியாக மோசமாகியது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீதத்துக்கும் கீழ் சென்று 9.7 சதவீதமாகச் சரிந்தது. 2020ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்கு சதவீதம் 4.26 சதவீதமாகக் குறைந்தது. 2015ம் ஆண்டில் ஆம் ஆத்மி வாக்கு சதவீதம் 54 சதவீதமாக உயர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியில்தான் ஆம்ஆத்மி கட்சி உதயமானது. ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் உதயமாக காங்கிரஸ் தோல்வியை விலையாகக் கொடுத்தது. ஒரு காலத்தில் டெல்லியில் ஏழைகள், கீழ்நடுத்தர மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த காங்கிரஸ், அந்த ஆதரவை இழந்து மக்கள் ஆம்ஆத்மி கட்சிக்கு மாறினர்.

தலைமைப் பிரச்சினை
காங்கிரஸ் கட்சியில் தீராதது உட்கட்சி சிக்கல். அது டெல்லி தலைமையில் தலைவிரித்தாடியது. 15ஆண்டுகளாக ஷீலா தீக்சித் தலைமையில் இயங்கிய டெல்லி காங்கிரஸ் கட்சி, அதன்பின் பெரிய அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் அமைப்பு ரீதியாகவும், அடிமட்ட அளவிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், களத்தில் இறங்கி வேலை செய்யவும் தலைவர்கள் இல்லை. பெரிய தலைவர்கள் கீழ்மட்ட அளவில் இறங்கி பணியாற்ற காட்டிய தயக்கம், உட்கட்சி பூசல், மாநிலத்துக்கு சரியான தலைமை இல்லாதது காங்கிரஸ் கட்சியின் ஆனிவேரையே அசைத்துப் பார்த்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த 2வது 3வது கட்டத் தலைவர்கள் பாஜகவுக்கும், ஆம்ஆத்மிக்கும் மாறி நல்ல பதவிகளைப் பெற்று, காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு நீர் ஊற்றினர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மையினர், குறைந்த வருமானம் தரும் பிரிவினர் ஆம் ஆத்மி கட்சியின் நலத்திட்டங்களால் தங்கள் மனநிலையை மாற்றினர்.
வழிகாட்டுதல், பேச்சாளர்கள் இல்லை
காங்கிரஸ் கட்சியில் ஒரு காலத்தில் இருந்த சிறந்த பேச்சாளர்கள், தலைவர்கள் டெல்லியில் இல்லை. காங்கிரஸ் அரசரின் கடந்த கால சாதனைகள், திட்டங்களை மக்களிடம் தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டிருக்கூடிய தலைவர்கள், பேசும் திறமை கொண்ட தலைவர்கள் இல்லை. இதனால் ஆம் ஆத்மி எளிதாக காங்கிரஸ் அரசின் சாதனைகளை அழித்து தன்னுடைய திட்டங்களை அதில் நிறுத்தியது.

குறிப்பாக இந்தத் தேர்தலில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்களித்தும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும், பிற மாநிலங்களில் என்ன செய்து வருகிறது, திட்டங்கள் என்ன என்று மக்களிடம் கொண்டு சேர்க்க சரியான தலைவர்கள் இல்லாதது தோல்விக்கு காரணம்.
இந்தியா கூட்டணியில் பிளவு
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், மக்களவைத் தேர்தல் முடிந்தபின், ஹரியானா, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு இந்தியா கூட்டணியின் தார்மீக ஒப்பந்ததை மீறியது.
ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கைது செய்தபோது அதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி தலைமை ஏற்று நடத்தினார். ஆனால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்து விமர்சித்தனர்.

டெல்லி மதுக்கொள்கை ஊழலில் அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிஷோடியைவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் பாஜகவுக்கு இணையாக, அரவிந்த் கேஜ்ரிவாலையும் காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இது மக்கள் மத்தியில் பெரிய குழப்பத்தையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தியது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியும் தனித்து நிற்கப் போவதாக அறிவித்தது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி, உத்தவ்தாக்ரே சிவசேனா, திரிணமூல் காங்கிஸ் உள்ளிட்ட கட்சிகள் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தனித்து செயல்பட்டது. இவை அனைத்தும் இந்தியா கூட்டணி என்பதே முரணானது என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதற்கு காங்கிரஸ் கட்சி பெரிய விலை கொடுத்தது.
இதையும் படிங்க: வீணாகிப்போன ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.! விழி பிதுங்கி நிற்கும் காங்கிரஸ் கட்சி