டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். எந்த கூட்டணியும் நிலையாக இருந்ததில்லை. அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணியில் மாற்றம் ஏற்படும். 2019ஆம் ஆண்டுக்கான கூட்டணியை பிப்ரவரியில்தான் அறிவித்தோம். தேர்தல் வரும்போது தான் ஒத்த கருத்தோடு இருக்கும் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்னொரு கருத்தையும் முன் வைத்தார். “எங்களுக்கு திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவை, தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி உண்டா, இல்லையா என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாத எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை வீழ்த்த எல்லா முயற்சிகளையும் எடுக்கும்” என்று தெரிவித்தார்.
சென்னையில் நேற்று பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவரும் கிட்டத்தட்ட இதேபோன்ற கருத்தைத்தான் செய்தியாளர்களிடம் கூறினார். “வருங்காலத்தில் திமுகவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர். அந்த வகையில் நாங்கள் ஓரணியில் திரண்டு நிற்கிறோம். அந்த ஒற்றை கோட்டில் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். பாஜக யாருக்கும் எதிரி இல்லை.” என்று அண்ணாமல் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!

ஆக, எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற நேர்க்கோட்டில்தான் பயணிக்கின்றனர். மேலும் தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என ஐந்து முனை போட்டி தமிழகத்தில் உள்ளது. இது அடுத்த ஆண்டு மூன்று முனை போட்டியாக மாறலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தங்கள் கட்சித் தலைவர்கள் பற்றி அண்ணாமலை விமர்சித்துப் பேசுவதாகக் கூறிதான் பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் ஒரே மாதிரியாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு.. கல்யாணம் எப்போன்னு தெரியல.. செமயாக கலாய்த்த திமுக கூட்டணி கட்சி!!