சென்னை, அடையார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. 54 வயது. இவர் நேற்று காலை 6 மணி அளவில் கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் லட்சுமியின் 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். அவரது வீட்டின் அருகிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. அதே போல் கிண்டியில் எம் ஆர் சி மைதானம் அருகே நிர்மலா என்ற பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் நிர்மலாவின் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதேபோல், பெசண்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதியில் வாக்கிங் சென்ற அம்புஜம் , வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் தனியாக நடந்து வந்த வித்யா மற்றும் மற்றொரு பெண், அடுத்ததாக சைதாப்பேட்டையில் இந்திரா என மொத்தம் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதில் பெரும்பாலானவர்கள் வயதான பெண்கள். மொத்தம் 20 பவுனுக்கும் அதிகம் என தெரிய வந்தது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். முதல் கட்டமாக சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு ஆசாமிகள் தப்பி செல்லும் சிசிடிவி வீடியோவை போலீசார் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: சென்னையில் துணிகர சம்பவம்.. 1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. பீதியில் மக்கள்..!

அதில் தெரிந்த அவர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். அவர்கள் சென்ற பைக் கர்நாடக பதிவு எண் கொண்டது என்பது உறுதி செய்யபப்ட்டது. எனவே வெளி மாநில ஆசாமிகள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் யூகித்தனர்.
வெளிமாநில கொள்ளையர்கள் இது போன்ற கடத்தலில் ஈடுபட்டால் வெளிமாநிலம் தப்பி செல்வது தான் அவர்களது பிளானாக இருக்கும். எனவே அவர்களை தடுக்க எல்லைப்பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஒரு வேளை அவர்கள் ரயில் அல்லது பிளைட்டில் தப்பி செல்லலாம் என சந்தேகித்த போலீசார், சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களிலும், சென்னை ஏர்போர்ட்டிலும் ஆய்வு செய்தனர்.

அப்போது ஏர்ப்போர்ட்டில் கொள்ளையர்கள் 2 பேரும் சிக்கினர். இண்டிகோ விமானம் மூலம் தப்பி செல்ல இருந்த அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் பெயரை மாற்றி மாற்றி கூறி உள்ளனர். கொள்ளையர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், விமானம் மூலம் ஹைதாராபாத் சென்று, அங்கிருந்து மும்பை சென்று, பின்னர் உத்தரப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. வடமாநிலத்தை சேர்ந்த அந்த இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.


அதில் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவர, நேற்று நள்ளிரவில் கொள்ளையடித்த நகைகளை அடையாளம் காண தரமணிக்கு காவல்துறை அழைத்துச் சென்றனர்.
அப்போது காவல்துறையை தாக்கிவிட்டு ஜாபர் குலாம் ஹூசைன் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தற்காப்புக்காக, இன்ஸ்பெக்டர் முகமது புகாரி சுட்டதில், கொள்ளையன் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..!