தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுவதில் உள்ள சிக்கல்கள்.. விதிகளை மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
அப்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருப்பதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதை யார் கண்காணிப்பார்? ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? ஆணையம் அமைப்பதற்கு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும், எப்போது தேர்வு நடைமுறைகளை முடிக்க போகிறீர்கள்? தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் எனக் கூறி, சமூக நலத் துறை செயலாளரை காணொலியில் ஆஜராக அறிவுறுத்தினர்.

அதன்படி, காணொலி மூலம் ஆஜரான சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழக்கு காரணமாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வழக்குகள் முடிந்து, இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மார்ச் 20ம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் எனத் தெரிவித்தார்.
அதன்பின், அமைச்சர் தலைமையிலான குழு, ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். பின் காவல் துறை சரிபார்ப்பு விசாரணை உள்ளிட நடைமுறைகள் முடிக்க மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு, மூன்று மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஆணையம் அமைத்த பின் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தனர். ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனம் குறித்து ஜூன் 20ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 24 மணி நேரம் கெடு: தமிழக கவர்னர் ரவி மௌனமாக இருப்பது ஏன்? அதை எப்படி எடுத்துக் கொள்வது? உச்சநீதிமன்றம் கேள்வி