தலைநகர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் போலவே பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கை எதிர்கொண்டபடியே தேர்தலை சந்தித்தார். அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான முதலமைச்சர் அதிஷி, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி போன்றோர் தாங்கள் மத்திய அரசால் பழிவாங்கப்படுவதாக கூறி வாக்கு சேகரித்தனர்.

ஆம் ஆத்மி ஆட்சியால் டெல்லி சீரழிந்து விட்டதாகவும், அதனை மீட்டெடுக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். குறிப்பாக இரட்டை என்ஜின் மாடல் ஆட்சியால் டெல்லியின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் வலியுறுத்தி வந்தார். எளிமையின் இருப்பிடம் எனக் கூறப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், எப்படி ஆடம்பரமான வீட்டில் வசிக்கிறார், அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துகள் வந்தன என்று நரேந்திர மோடி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: தட்டித் தூக்கும் பாஜக… துடைப்பத்தை தூக்கி எறிந்த டெல்லி மக்கள்… முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் அத்தியாம்..!
அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருந்த ஆம் ஆத்மி, டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. காங்கிரசும் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்ள தனித்து களம் கண்டது. பாரதிய ஜனதா வைத்த அதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே காங்கிரசும், ஆம் ஆத்மியை விமர்சித்தது. இதனால் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது. ஆரம்பம் முதலே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்று வருகிறது. ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், நியூ டெல்லி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளரை விட பின்தங்கி உள்ளார். இதன்மூலம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் படியே டெல்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 500 தொழில் அதிபர்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: மோடி அரசு மீது, கெஜ்ரிவால் குற்றச்சாட்டு