தவெக கட்சி ஆரம்பித்து ஓராண்டை முடித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் கட்சிக்குள் வருவதற்கு பல கட்சிகளில் இருந்து வி.ஐ.பிக்கள் முதல் மாவட்ட அளவிலான ஆட்கள் வரை தயாராக இருக்கிறார்கள். கட்சிக்குள் நுழைய துடிக்கிறார்கள். ஆனால் தலைமையில் உள்ள அந்த இருவரும் கைகோர்த்துக்கொண்டு உள்ளே யாரையும் அனுமதிக்காமல் கட்சியை நடத்தி வருகின்றனர் என்கிற கருத்து பரவலாக வைக்கப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனாவையே கட்சிக்குள் இணைய விடாமல் தடுத்த நிலையில் விஜய் நண்பர் மூலம் விவரம் அறிந்து அழைத்து சேர்த்துக்கொண்டார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு இருவரும் கடும் கோபத்தில் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆதவ்வுடன் சகஜமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் கட்சிக்குள் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வரும் யாருக்கும் விஜய்யை சந்திக்க இருவரும் அனுமதி தருவதில்லை. இவர்களே முடிவெடுத்து ஒதுக்கி விடுகிறார்கள். இதில் ஆளுங்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தொடங்கி எதிர்க்கட்சிகளில் உள்ள பல விஐபிக்கள் வரிசை உண்டு. ஆனால் அவர்களுக்கு பனையூரின் பெரும் இரும்புக் கதவுகள் திறப்பதே இல்லை.

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் காளியம்மாள் விஜய்யின் சினிமா உலக நண்பர் ஏற்பாட்டில் விஜய்யை நேரடியாக சந்தித்ததாகவும் விஜய் அவரை கட்சியில் இணைக்க ஒப்புக்கொண்டு ஜான் மற்றும் புஸ்ஸியிடம் பேசிவிட்டு நல்ல முடிவாக சொல்வதாக சொல்லி அனுப்பியதகவும் அதன் பின் இந்த தகவல் அவர்கள் இருவரில் ஒருவரான மிஸ்டர் ஜெ மூலம் சீமானுக்கே சென்றதாகவும், இதனால் அவர் காளியம்மாள் மீது கோபமடைந்ததாகவும் ஒரு பேச்சு தவெகவில் உண்டு.
அதன் பின்னர் காளியம்மாளின் நிலைதான் திரிசங்கு நிலை ஆனது என்கின்றனர் விவரமறிந்தோர். ஒருபுறம் சொந்தக்கட்சியால் ஒதுக்கப்பட்டு மறுபுறம் தவெகவிலிருந்தும் பதில் இல்லாமல் குழப்பத்தில் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக, திமுகவிலிருந்தும் காளியம்மாளுக்கு அழைப்பு வந்துள்ளது அவர் அதை ஏற்காமல் தயக்கத்தில் இருந்துள்ளார். காரணம் அங்கு போனால் பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவோம் என்பது அவருக்கு தெரியும்.

ஆனாலும் காளியம்மாள் திமுகவுக்கு போகிறார், அதிமுகவுக்கு போகிறார் என்றெல்லாம் கதைகள் வெளியாகிறது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுன் பொறுப்பேற்றதால் தனது நிலை குறித்து அறிந்துக்கொள்ள ஆதவ் அர்ஜுனை காளியம்மாள் சந்தித்ததாக கூறப்படுகிறது. நான் பேசிவிட்டு நல்ல பதிலை சொல்கிறேன் என காளியம்மாளிடம் சொல்லி அனுப்பியுள்ளார் ஆதவ்.
இதனிடையே, ஏற்கனவே காளியம்மாளை விஜய்யிடம் அழைத்துச் சென்றதாக கூறப்படும் விஜய்யின் சினிமா உலக நண்பர் விஜய்யிடம் காளியம்மாளை தவெகவில் இணைப்பது பற்றி கேட்டுள்ளார். ஆமாம் பேசிவிட்டு சென்றார், இணைக்கலாமே ஒன்றும் பிரச்சனை இல்லை என விஜய் சொன்னதாக தெரிகிறது, அதற்கு அங்கு இருந்த மிஸ்டர் ஜெ கடுமையான ஆட்சேபனை தெரிவித்து அவர் வந்தால் சீமான் கோபித்துக்கொண்டு இன்னும் நம்மை திட்டுவார் என விஜய்யை குழப்பி விட்டதாகவும், விஜய் சரி நீங்கள் பேசி நல்ல முடிவெடுங்கள் என சொன்னதாகவும் தகவல் கசிகிறது.

மிஸ்டர் ஜெயின் கூற்றுப்படி காளியம்மாள் வந்தால் சீமான் கோபித்துக்கொள்வார் என்றால் சி.டி.நிர்மலும், விரைவில் இணையபோகும் மருது அழகுராஜும் வந்தால் எடப்பாடி சந்தோஷப்படுவாரா? ஓபிஎஸ் சந்தோஷப்படுவாரா? திமுகவிலிருந்து ஆட்கள் வந்தால் ஸ்டாலின் கோபித்துக்கொள்வார் என்றால் கட்சிக்கு எப்படித்தான் ஆட்கள் வருவார்கள்? இது என்ன லாஜிக், இவர் என்ன கட்சிக்காரரா? காண்ட்ராக்ட் முடிந்தால் போய்விட போகிறார் என்று அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்து சென்றுள்ளனர்.
தவெகவில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வெளியில் வந்தவண்ணம் இருக்கிறது. தீர்க்கத்தான் ஆட்கள் இல்லை. பிப்ரவரி 26-க்கு பின் இன்னும் பல கதைகள் வரும் என்கிறார்கள்.