திருமணம் ஆகி வரும் பெண்கள் கன்னித்தன்மையோடு இருக்கிறார்களா என்பதை பரிசோதிக்கும் வழக்கம் இன்னமும் நமது நாட்டில் இருந்து வருவது வியப்பாகத்தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றாலும் அறிவியல் வளர்ந்த பிறகு அது போன்ற மூடநம்பிக்கைகள் படிப்படியாக மறைந்தன.
ஆனால், வடமாநிலங்களில் சில குடும்பங்களில் இந்த வழக்கம் தற்போது கூட நீடித்து வருவது வியப்பை அளிக்கிறது. திருமணம் ஆகி வந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம் குறித்த புகார் ஒன்று சமீபத்தில் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தது. அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தூர் நீதிமன்றத்தில் அது குறித்து புகார் செய்த அந்த பெண் தனது மாமியார் மற்றும் உறவினர்கள் திருமணம் ஆகி வந்தவுடன் முதல் இரவுக்கு முன்பாக தனக்கு கன்னித்தன்மை பரிசோதனை (வெர்ஜினிட்டி டெஸ்ட்) செய்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: நாடு கடத்தல் புதிதல்ல! 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது: எண்ணிக்கையை வெளியிட்ட மத்திய அரசு
முறைப்படி தகுதியான மருத்துவ பணியாளர்களால் தான் இந்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆனால் பொருத்தமற்ற முறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் புகாரி ல் அந்த பெண் கூறி இருந்தார்.
இந்த நிகழ்வு குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளும் முறையற்ற வழிமுறைகளில் அந்த பெண்ணுக்கு கன்னித் தன்மையை பரிசோதனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையால் திருமணமான மூன்று மாதங்களுக்குள் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக ஒன்பது மாதம் ஒன்பது நாட்கள் வரை கர்ப்பமாக இருந்த அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையும் இறந்த நிலையிலே பிறந்தது. தற்போது ஒரு மகள் மட்டும் அந்த பெண்ணுக்கு இருக்கிறார்.

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய இந்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, பிற்போக்குத்தனமான இந்த நடைமுறை பற்றி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய மாமியார் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி போலீ சாருக்கு அவர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு சட்டவிரோதமான முறையில் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொண்டதாக வந்த முதல் புகார் மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சில பகுதி கிராமங்களில் மணப்பெண்கள் கன்னித்தன்மை உடையவர்கள் தான் என்பதை திருமணத்திற்கு முன்பு உறுதி செய்யும் வழக்கம் இருந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் அப்போது கிராமங்களில் நடைமுறையில் இருந்த இது தொடர்பான ஒரு வழக்கம் நினைவுக்கு வருகிறது. அந்த காலத்தில் திருமணத்திற்கு முந்தைய காதல் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
பெண்கள் வயதுக்கு வந்து விட்டாலே பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தி விடுவார்கள். கிட்டத்தட்ட வீட்டுச் சிறை மாதிரி தான் அவர்களுக்கு. அதையும் மீறி காதல் வலையில் விழுந்தால் இப்போது ஆணவக் கொலை என்று அழைக்கப்படும் கௌரவ கொலை கூட சில இடங்களில் நடந்திருக்கிறது.
இதே அடிப்படையில் தான் தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக வரும் மணப் பெண்ணும் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். திருமணத்திற்கு முன்பு பூ வைக்கும் நிகழ்ச்சி அல்லது பட்டு கட்டும் நிகழ்ச்சி என்று ஒரு விழாநடைபெறுவது வழக்கம்.

அந்த சமயத்தில் மணமகன் வீட்டுப் பெண்கள் தான் மணப் பெண்ணுக்கு புடவை கட்டுவார்கள். அவர்கள் புடவை கட்டும்போதே அந்தப் பெண் கன்னித்தன்மை உடையவரா இல்லையா என்பதை தங்களது அனுபவத்தில் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சொல்வதை சிறுவயதில் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
புடவை கட்டும் போது அப்படி சந்தேகம் எதுவும் வந்தால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வந்துவிடும் வழக்கமும் அப்போது இருந்தது. காலப்போக்கில் இந்த வேண்டாத வழக்கம் மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!