இஸ்லாமியர்களை தரை குறைவாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பகுதி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகர் விஜய் பற்றி பேசிவிட்டு, ''தொப்பி போட்டு இஸ்லாமியர்கள் எச்சை சோறுகள்'' என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நோன்பு வைத்துள்ள இஸ்லாமியர்கள் இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வண்ணாரப்பேட்டை ஹெச்-1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களை பாஜகவுடன் இணைப்பதே நோக்கம்... மோடியின் அடுத்த அஸ்திரம்..!

இதுகுறித்து தவெக கொள்கைபரப்புச் செயலாளர் ராஜ்மோகன், ''நம் வெற்றித் தலைவர் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் தி.மு.க. தலைமையின் உள்மனத்திட்டம் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் உமிழப்பட்டிருக்கிறது. அரசியல் நாகரிகம் என்ற சொல்லையே முற்றிலும் மறந்து,துறந்து அநாகரிக அரசியலையே வளர்த்தெடுப்பதுதான் தி.மு.க. தலைமையின் தொன்றுதொட்ட வேலை.

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலன் என்று சித்தாந்த வேஷம் போடுவது, மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் மட்டும் வைத்துக்கொண்டு, எல்லா மதங்களையும் கீழ்த்தரமாக தங்கள் ஏவல் பிராணிகளை வைத்து விமர்சிக்கச் செய்வது எல்லாம்தான் தி.மு.க. தலைமையின் உண்மை முகம்.
பா.ஜ.க.தான் சிறுபான்மை மக்களின் நேரடி எதிரி. அதேபோல சிறுபான்மை மக்களின் மறைமுக எதிரிதான் இந்த தி.மு.க. தலைமை. பா.ஜ.க.வுடன் இருக்கும் மறைமுகக்கூட்டால்தான், இதுவரை மறைமுகமாக இருந்த சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புணர்வு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களால் நேரடியாக வெளிப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சகோதரர்களுடனும், அனைத்து சிறுபான்மை சகோதர மக்களுடனும் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுடனும் சகோரத்துவம் பேணும் இணக்கமிக்க மதநல்லிணக்கம் பேணும் உண்மையான உணர்வுள்ள தலைவர்தான் நம் வெற்றித் தலைவர். அவர் கலந்துகொண்ட நோன்பு திறப்பில் பங்கேற்ற இஸ்லாமிய சகோதரர்களை இழிவாகப் பேசியது சிவாஜியின் வாய் மட்டுமே.அதன் உண்மையான குரல் எதுவென்று கேட்டால், இதுபோன்ற பேச்சாளர்களை அடிக்கடி அழைத்துப் பாராட்டும் தி.மு.க.வின் முக்கிய குரல்தான் அது என்பதை அனைவரும் அறிவர்.
வரம்புமீறிப் போகும் இவர்களை, மக்களே என்ன செய்யப் போகின்றனர் என்பதை இனி இந்த நாடே பார்க்கப் போகிறது.

ஆமாம்.பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் தி.மு.க. கபடதாரிகளின் முகத்திரைத் தானாகவே கிழியத் தொடங்கி உள்ளது. போகப்போக இன்னும் முழுதாகவே அம்முகத்திரை கிழியும். அப்போது, மக்கள் அவர்களின் அரசியலைக் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி இருப்பார்கள். வெகு விரைவில் வரும் அந்த நாள், அதாவது 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவு தெரியும் நாள்தான் என்பதையும், அந்த நாளின் வெற்றி நாயகனாக எங்கள் வெற்றித் தலைவரே இருப்பார் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
''திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முஸ்லீம் சமூகத்தினை இழிவுபடுத்தி, மத ஒற்றுமைக்கு பங்கமளிக்கும் வகையில் "எச்சசோறு" எனக் கூறியது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இது தமிழகத்தின் மதசார்பற்ற பண்பாட்டிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானது.
திமுக, சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று பெருமையுடன் கூறிக்கொள்வது, ஆனால் அதன் சொந்த மேடையிலிருந்து ஒரு பேச்சாளர் இவ்வாறு பேசுவதை அனுமதிப்பது, அந்தக் கட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் போல நடித்துக் கொண்டு, மறுபுறம் அவர்களை இழிவுபடுத்துவது வஞ்சக அரசியலே தவிர, சமத்துவத்திற்கான உண்மையான உறுதிபாட்டை காட்டுவதில்லை.

எதிர்ப்படும் கோபத்தை சமாளிக்காமல், உடனடியாக கட்சி நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, பேச்சாளரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது திமுக தலைமையின் பொறுப்பு. இல்லையெனில், சிறுபான்மையினரின் காவலர் என்ற முகமூடி களைந்து, உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழகம் மதசார்பற்ற, சகோதரத்துவம் நிலவும் இடமாகவே இருக்க வேண்டும். எந்தக் கட்சியுமே, எந்த சமூகம் மீதும் இழிவான வார்த்தைகளை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. இது போன்ற பேச்சுகள் இன அழிப்பிற்கு வித்திடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, சமூக ஒற்றுமையை காப்பாற்ற, இவ்வாறான வெறுப்புப் பேச்சுகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்'' என தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் அறிக்கை இல்ல, வெத்துவேட்டு அறிக்கை... திமுகவை சாடிய ஓ.பி.எஸ்..!