தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஆனாலும், பாரதிய ஜனதா தரப்பில் இருந்து அதிகப்படியான வாழ்த்துகள் அந்தபக்கம் பறப்பதால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமா என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் கட்சிக் கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் இடம்பெற்றிருந்தது. மொத்தம் 60 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதன்பின்னர் 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று 5 இடங்களில் போட்டியிட்டது. அதிலும் தோல்வியையேத் தழுவியது. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன், விஜயபிரபாகரன் மட்டும் கடைசிவரை போராடி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இதையும் படிங்க: யூடர்ன் போடும் பிரேமலதா விஜயகாந்த்.? திமுக கூட்டணியில் தேமுதிக.. அறிவாலயத்தில் திகுதிகு நகர்வுகள்.!?

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தற்கு ஈடாக, ராஜ்யசபாவில் அக்கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதாவது வருகிற ஜுலை மாதம் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆறுபேரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளார்.
அதில் பிரேமலதாவை சகோதரி எனக் குறிப்பிட்டு கட்சி எல்லைகள் கடந்து மிகவும் அன்பாக என்னிடம் பழகக் கூடியவர். இறைவனின் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார். அதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில், பிரேமலதாவை அக்கா எனக் குறிப்பிட்டு மக்கள் பணி தொடர இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார். பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் பிரேமலதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில் சற்றுத் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இபிஎஸ் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாக பேசப்படுகிறது. அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் தேமுதிகவுக்கு தயக்கம் இருக்காது. ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனை ஏற்றுக் கொண்டவர் தான் பிரேமலதா. எனவே இந்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் அரசியல் செய்திகளும் கலந்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதையும் படிங்க: பொத்தாம் பொதுவாக ஊழல்னு சொன்னா எப்படி? உரிய விசாரணை நடத்துங்க - பிரேமலதா காட்டம்