தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரிய விண்ணப்பத்துக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற கல்வி மற்றும் காவல் துறை சார்ந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து, விதிமுறைகளை கண்டறிய உத்தரவிடக் கோரி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: குடமுழுக்கு தொடர்பாக நாம் தமிழர் தாக்கல் செய்த மனு.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விக்கிரவாண்டி பள்ளி விவகாரம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சம்பவத்தில் பலியான சிறுமியின் தந்தை, சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 6ம் தேதி அரசுக்கு மனு அளித்து விட்டு, அரசுக்கு அவகாசம் வழங்காமல் 13ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்ததன் மூலம், பொது நல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், மனுவில் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அடைப்பை சரி செய்ய செப்டிக் டேங்க் திறந்து வைத்திருக்கலாம். அதற்கு அரசை எப்படி குறை கூற முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் உத்தரவு வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்று தள்ளுபடி செய்தாலும், மனுதாரரின் விண்ணப்பத்துக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏப்ரல் 21-க்குள் கொடிக் கம்பங்களை அகற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!