தமிழகத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு 2017 முதல் 21 வரை பாஜக துணையுடன் ஆட்சி நடத்தி வந்த அதிமுக பின்னர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதன் பின்னர் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைக்கு அதிமுகவினர் வந்தனர். பாஜகவினால் அவப்பெயரும் தோல்வியும்தான் கிடைத்தது என்று அதிமுக தலைவர்கள் பகிரங்கமாக கூறி வந்தனர்.

2024 தேர்தலில் பாஜக அதிமுக தனித்து நின்றதால் திமுக கூட்டணிக்கு அது லாபமாக அமைந்தது. தெரிந்தே கூட்டணியை உடைத்து திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பினை வழங்கும் பணியை அண்ணாமலை செய்தார் என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக எதிரான பிரச்சாரம் பெரிதாக கிளப்பி விடப்பட்டது தொடர் தோல்வி நாயகன் என்று எடப்பாடி பழனிசாமியை திமுகவினர் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: மெகா NDA கூட்டணி அமைகிறது...எடப்பாடி மன மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன? அட இந்த கட்சிகள் எல்லாம் வருகிறதா?
இந்த நிலையில் அதிமுக, திமுகவை 2026-ல் எப்படி வீழ்த்தப் போகிறது என்ற கேள்வி அதிமுக தலைவர்களிடையே நெருடலாக இருந்து வந்தது. இந்த நேரத்தில்தான் விஜய் சொந்த கட்சியை தொடங்கினார். திமுகவை வீழ்த்துவது ஒன்றே லட்சியம், சித்தாந்த எதிரி, அரசியல் எதிரி என்று விஜய் அறிவித்தார். அதிமுகவை விஜய் விமர்சிக்காமல், கூட்டணி, ஆட்சியில் பங்கு அதிகார பகிர்வு என்றெல்லாம் பேசியது அதிமுக, தவெக கூட்டணி அமையும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாங்கள் தனியாக நின்று ஆட்சியைப் பிடிப்போம் என்று ஒரு பக்கம் கட்சியினர் கூறி வந்தனர். தவெக என்ன நிலைபாட்டில் இருக்கிறது என்பது பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் தவெக அழைப்பின் பேரில் வந்த பிரசாந்த் கிஷோர் அதிமுக தவெக கூட்டணி வைத்தால் ஸ்வீப் ஆகும், ஆனால் அந்த எண்ணத்தை குப்பை தொட்டில் போட வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தது விஜய் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரமாட்டார் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரிந்து வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள்ளேயே நெருக்கடிகள் அதிகரித்தது பாஜக கூட்டணிக்குள் போகாவிட்டால் தேர்தலை சந்திக்க முடியாது, பெரும் இழப்பை அதிமுக சந்திக்க வேண்டிவரும் என்றெல்லாம் கூறப்பட்டது. அந்த யதார்த்த உண்மையை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டார். இதை அடுத்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். இதன் மூலம் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி உறுதியானது.

இதில் மற்ற கட்சிகளையும் கூடுதலாக நாம் தமிழர் கட்சியும் அணிக்குள் கொண்டு வரலாம், மிகப்பெரிய அணியை தமிழகத்தில் அமைத்து திமுகவை வீழ்த்துவது ஒன்றே லட்சியம் என்று முடிவெடுத்ததாக கூறப்பட்டது. மீண்டும் NDA கூட்டணி அமைகிறது என்றவுடன் பல்வேறு கேள்விகள் பலர் மத்தியில் எழுந்தது. அதில் ஒவ்வொரு கேள்வியாக நாம் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தது. பாஜக கூட்டணி என்றவுடன் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக தலைவர்களும் தங்களது முதல் நெருடலை வலியுறுத்தி உள்ளனர்.

அது என்னவென்றால் ஏற்கனவே கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாகஇருந்தது அண்ணாமலையின் போக்கு. அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவின் மறைந்த தலைவர்களை விமர்சித்ததும், அதிமுகவை ஊழல் கட்சி என்று திமுகவுடன் ஒப்பிட்டு பேசியதும் கூட்டணிக்குள்ளயே பிரச்சினை உருவானது. அண்ணாமலையை அடக்கி வையுங்கள் இல்லாவிட்டால் கூட்டணி முறியும் என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து டெல்லி மேலிடத்தில் சொல்லியும் அவர்கள் மதிக்காத காரணத்தால் கூட்டணி முறிவு ஏற்பட்டது.

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைகிறது என்றவுடன் அதிமுக தலைவர்களின் முதல் கோரிக்கை அண்ணாமலையை மாற்ற வேண்டும், அவருக்கு பதில் புதிய தலைவரை கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் சங்கடம் இல்லாத ஒரு கூட்டணி அமையும் என்பதாக இருந்தது. இந்த கோரிக்கை பாஜக தலைமையால் பரிசீலிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அண்ணாமலை மாற்றப்பட்டால் அந்த இடத்தில் நயினார் நாகேந்திரன் வருவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோருடன் நாங்கள் நேரடியாக கூட்டணி வைக்க முடியாது, இணைப்பு என்கிற பேச்சுக்கே வழியில்லை என்று தெரிவித்ததாகவும் இதில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கையில் அவர்களுக்கான தொகுதியை நாங்கள் ஒதுக்குவோம் என்பதாக சமாளித்துள்ளனர். அதை பின்னர் பேசிக்கொள்வோம் என்று கூறியுள்ளனர். ஆனாலும் ஓபிஎஸ் டிடிவி உடன் ஒரே மேடையில் ஏற மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாகவும் அதை சங்கடப்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பாஜக உறுதியளித்ததாகவும் தகவல்.

அதே போன்று சசிகலா விவகாரத்தையும் எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், தென் மாவட்டத்தில் ஒன்றுபட்ட பழைய அதிமுக உருவாக வேண்டும், உங்களுக்கு சங்கடம் ஏதும் வராது என்று பாஜக தலைவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதே போன்று தொகுதி எண்ணிக்கை குறித்த பேச்சு தற்போதைக்கு பேச வேண்டாம், ஒரு ஒருமித்த கருத்து வந்து பொதுவான போராட்டங்கள் உள்ளிட்டவை நடந்த பிறகு தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பேசுவோம் என்று இரு தரப்பிலும் முடிவு செய்துள்ளனர்.

அவ்வாறு ஒதுக்கப்படும் தொகுதிகள் அதிமுகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் கௌரவமான ஒதுக்கீடாக இருக்கும், அதே நேரம் பாஜகவிற்கும் கௌரவமான தொகுதிகள் அதில் கூடுதலாக டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுக்கு வழங்குவது என்பதும். கூடுதலாக நாம் தமிழர் கட்சி பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்தும் பின்னர் பேசி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல். அதேபோன்று முதல்வர் வேட்பாளர் மாற்றமின்றி எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அப்போதும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதில் மாற்றமில்லை என்பதும் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மொத்தத்தில் இரு தரப்பிலும் தங்களுடைய பிரச்சனைகளை உணர்ந்து ஒரு சமூகமான பேச்சுவார்த்தை ஒப்பந்தமாக அந்த கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் NDA கூட்டணியில் உள்ள சிறு சிறு சிக்கல்களையும் தீர்த்து அதற்கான நடைமுறைகள் எளிதாக அமையும் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. அதேபோன்று அண்ணாமலை குறித்த முடிவை பாஜக தலைமை விரைவாக எடுக்கும் என தெரிகிறது. நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அதிமுக தலைவர்கள் சென்னை திரும்பிய நிலையில் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு கூட்டணிக்கான பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களும் அவரிடம் தெரிவிக்கப்படும் என தெரிகிறது. ஒருவேளை தலைவர் பதவி மாற்றப்பட்டால் அண்ணாமலைக்கு கௌரவமாக மத்திய இணையமைச்சர் பதவி கொடுக்கப்படுவதற்கான சாத்தியக்குறுகளும் உள்ளது. அண்ணாமலை தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் ஒரு முக்கிய தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை அண்ணாமலையின் தேவை தமிழகத்தில் வேண்டும் அண்ணாமலை தலைவராக வந்த பின் தான் இளைஞர்களின் கவனம் பாஜக பக்கம் திரும்பி இருக்கிறது என்பதால், அண்ணாமலையின் தலைமை தொடரும் என பாஜக தலைமை முடிவு எடுத்தால் அதற்கு ஏற்ப அதிமுக தலைவர்களிடம் அண்ணாமலை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஒரு இணக்கமான சூழ்நிலையை அதிமுக தலைவரிடம் அண்ணாமலைக்கு உருவாக்கி தருவது என்பது பற்றி பாஜக முடிவெடுக்கும் என தெரிகிறது.

அதன் பிறகு அண்ணாமலை அதிமுகவை விமர்சிக்காமல் கூட்டணி கட்சிக்குரிய கண்ணியத்துடன் நடக்க வேண்டும் என்பதும் மேலிடத்திலிருந்து வலியுறுத்தப்படும் என தெரிகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!