மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் தமிழ்நாட்டில் சர்ச்சையும் வெடித்து வருகிறது. தமிழத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மும்மொழி கொள்கைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே மும்மொழி கொள்கையை ஆதரித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

அதாவது முதலில் பிஎன் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்ட தமிழக அரசு தற்போது யூ டர்ன் போட்டு மாணவர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதாக பேசி இருந்தார். மேலும் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இந்தி படித்தால் நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் முன்னேறலாம் என பேசி இருந்தனர். இந்த நிலையில் இந்தி மொழியை பேசக் கூடியவர்களே தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவதாக விசிக தலைவர் திருமாவளான் பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, “ தமிழ்நாட்டுக்கு இருமொழி கொள்கை போதுமானது. இருமொழி கொள்கையை நடைமுறைபடுத்துவது தான் இந்திய ஒற்றுமைக்கு ஏற்புடையது. மும்மொழி கொள்கையை என்றும் தமிழ்நாடு எதிர்க்கும். பாஜகவை சேர்ந்தவர்கள் இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்று கூறுகின்றனர். இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு இல்லை.
இப்படி இருக்கையில் ஒரே தேசம், ஒரே மொழிக் கொள்கையை எதிர்காலத்தில் எப்படி உருவாக்க பாஜக முயற்சிக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக மும்மொழி கொள்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

''பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ 2,000 கோடி நிதி, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. சட்டத்தால் கட்டாயமாக்கப்படாத ஒரு கொள்கையை பின்பற்றாததால், எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காது என்ற வாக்குறுதியை ஒன்றிய அரசு அளிக்குமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்காமல் மாணவர்களை வஞ்சிப்பதாகவும், தமிழக மக்களை அவமானப்படுத்துவதாகவும் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.