கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியை முறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்பத உறுதியாக இருந்தார். என்றாலும் மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. சில தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்றது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும் என்று அப்போதே பேச்சு எழுந்தது. அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வலுவான கூட்டணியை அமைக்க பழனிசாமி திட்டமிட்டு வருகிறார். இதேபோல பாஜகவின் தேசிய தலைமையும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்கும்போதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி டெல்லி சென்றனர். நேற்று இரவு திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அவருடன் அதிமுக நிர்வாகிகளும் இருந்தனர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு மலம் வீசி தாக்குதல்.. வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி.!!

அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம், கூட்டணி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகி விட்டது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களை ஏமாற்றினால்.. 2026ல் திமுக ஏமாறும்.. தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் பகிரங்க எச்சரிக்கை.!!