சமூக ஊடகங்கள் மூலமாக பல நன்மைகள் ஏற்பட்டாலும் சில தீமைகளையும் ஏற்படுத்துகிறது. தகவல் பரிமாற்றம், வணிகங்களை மேம்படுத்துவது, குடும்பத்தினரையோ, நண்பர்களையோ ஒருங்கிணைப்பது என சமூக ஊடகங்கள் பல விதங்களில் நமக்கு நன்மை அளிக்கிறது. இருந்தாலும் கூட சமூக ஊடகங்களை பார்த்து குற்றங்கள் நடைபெறுவது, தவறான வழிகளை தேர்ந்தெடுப்பது என சில தீமைகளையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
அதிலும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் கொடுமையின் உச்சம். Youtube பார்த்து பிரசவம் பார்ப்பது, மருத்துவர்களிடம் செல்லாமல் சிகிச்சை மேற்கொள்வது என அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படியாக ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனக்குத்தானே ஆபரேஷன் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ராஜா பாகுகுமார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அப்பன்டிக் ஆபரேஷன் நடைபெற்றுள்ளது. அதே இடத்தில் மீண்டும் அவருக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த அவர், யூடியூப் மற்றும் இணையதளத்தின் வாயிலாக ஆபரேஷன் செய்து கொள்வதை எப்படி என்று தெரிந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹோலி கலர்ஸ் பிடிக்கலன்னா நாட்டை விட்டு போங்க.. உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!

பின்னர் தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்டதும் அது விபரீதத்தில் முடிந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. மருந்தகத்திலிருந்து சர்ஜிக்கல் நைஃப் உள்ளிட்டவற்றை வாங்கி வந்த இளைஞர் நேற்று மாலை தனது வீட்டின் கதவை மூடிக்கொண்டு தனது வலது புற அடிவயிற்று பகுதியில் ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார். சர்ஜிகல் கத்தியால் கீறிய அந்த இளைஞர் தனது விரலை உள்ளே விட்டு என்ன இருக்கிறது என்று பார்த்து இருக்கிறார்.
கீறல் போடும் போது ஏழு இன்ச் நீளத்திற்கு அந்த கீறல் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கத்தியை வயிற்றிற்குள் விட்டபோது ஆழமாக சென்றுள்ளது. இதனால் அவருக்கு வலி அதிகமானதுடன் நிற்காமல் இரத்த பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாது சாதாரண பிளாஸ்டிக் நூலை கொண்டு 11 முறை தனக்கு தானே தையலும் போட்டுக் கொண்டுள்ளார். ரத்தம் நிற்காமல் இருந்ததால் அச்சமடைந்த அந்த இளைஞர் தனது கதவை திறந்து வீட்டில் இருப்பவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இளைஞரின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உ.பியில் 8 ஆண்டுகளில் 210 கோடி மரங்கள்.. யோகி ஆதித்யநாத் அதிரடி..!