இந்த ஆண்டு ஜூலையில் வைகோ (மதிமுக), அன்புமணி ராமதாஸ் ( பாமக), வில்சன், எம்.எம். அப்துல்லா, சண்முகம் (திமுக), சந்திரசேகரன் (அதிமுக) ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைகிறது. ஜூலையில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஓரிடம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலங்களை உறுப்பினர் பதவி தொடர்பாக திமுகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதா என்கிற கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் ஒன்றும் போடவில்லை. நாங்கள் கோரிக்கையும் வைக்கவில்லை" என்று வைகோ பதிலளித்தார். தொடர்ந்து வைகோ கூறுகையில், "மாநிலங்களவையில் நான் இருந்த அத்தனை ஆண்டுகளிலும் மீனவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பாத நாட்களே கிடையாது. இந்திய அரசின் மெத்தனப் போக்கால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது. இது வருத்தமாக உள்ளது.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமரிடம் பல முறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை. தமிழர்களை உதாசீனம் செய்யும் மத்திய பாஜக அரசை நான் கண்டிக்கிறேன். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் இணைந்திருந்தால் இந்தத் தேர்தல் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். காங்கிரஸுக்கும் வெற்றி கிடைத்திருக்கும். ஒற்றுமை இல்லாததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது." என்று வைகோ தெரிவித்தார்.
.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் குடும்பத்தின் ஆணவம்... நேரு, இந்திராவால் வெட்கப்படுகிறேன்..' மோடி கடும் ஆத்திரம்..!