மதுரையில் நகரத்தின் அதிமுக செயலாளர்களில் இரு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூவருமே எதிரெதிர் திசைகளிலேயே பயணிப்பதும், இவர்களுக்கு கீழே பலதரப்பட்ட அணிகளாக உடைந்து கிடப்பதும் ஊரறிந்த ரகசியம். கட்சியின் இணையப் பிரிவின் மாநிலத்தலைமைப் பொறுப்பில், மூவரில் ஒருவரான ராஜன் செல்லப்பா வாரிசான ராஜ் சத்யனும் இருக்கிறார். கட்சியில் அதிகாரம் மிக்க முக்கிய இடத்தில் இருப்பதாக தன்னை காட்டிக் கொள்ளும் ஆர்.பி.உதயகுமாருக்கு இந்த விஷயம் நீண்ட காலமாக உறுத்தலாகவே இருந்திருக்கிறது.

நேரடியாக களத்தில் இறங்கினால் சிக்கலாகி விடும் என்று யோசித்த ஆர்.பி.உதயமகுமார், கொங்கு மண்டலத்து எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மூலமாக அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, செல்லமானவரின் வாரிசை கழற்றிவிட்டு, பாஜக கட்சியிலிருந்து அதிமுகவுக்குள் நுழைந்த, சி.டி.நிர்மல் குமாரை மாநில தலைமைப் பொறுப்பில் பணியமர்த்த ஆயத்தமாகி வருகிறார்கள். சி.டி.நிர்மல் குமாரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்தான். தகவலறிந்ததும், ராஜன் செல்லப்பா செம டென்ஷனாகி உள்ளார்.
இதையும் படிங்க: பதுங்கும் எடப்பாடி... ஒதுங்கும் பாஜக... ஜி.கே.வாசன் தலையை பதம் பார்க்க ரெடி... அண்ணாமலையின் அடடே அரசியல் கணக்கு
மதுரையில் ஆட்கள் போடுவதில் கொங்கு மண்டலத்தார் எப்படி ஆதிக்கம் செலுத்தலாம் என கொதித்து எழுந்திருக்கிறார். ஆனால், பின்னால் இருந்து இயக்கியவர் ஆர்.பி. உதயகுமார் என்று தெரிய வந்ததும், அவர் மீது பன்மடங்கிற்கு ஆத்திரம் அதிகரித்துள்ளது. கூடவே இருந்து கொண்டு குழிபறிப்பதாக ராஜன் செல்லப்பா தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் ஆர்.பி.உதயகுமாரை குறை கூறிப் புலம்பித் தவித்து வருவதாக கூறுகிறார்கள் தூங்காநகரத்து ரத்தத்தின் ரத்தங்கள்.

இன்னொரு பக்கம் செல்லூர் ராஜூ மீதும் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து மதுரை அதிமுகவினர், ‘‘மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் செல்லூர் ராஜு. இவரது செயல்பாடுகள், பேச்சுக்கள் அனைத்தும் காமெடியாக இருந்தாலும், உள்ளுக்குள் விஷமத்தனமாக இருக்கும். அந்தளவிற்கு மதுரை மாநகரில் உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறார்.
இவருக்கு கீழ் பணியாற்றும் பகுதி செயலாளர்களுக்கு சுமார் ஒரு கோடி வரை, ஒரு பைசா வட்டிக்குப் பணம் கொடுத்து வருகிறார். இவரிடம் பணம் பெற்றவர்கள்தான் பகுதிச் செயலாளர்களாக நீடிக்க முடியும். அதே போல் பினாமி பெயர்களில் நிலத்தை வாங்கி குவித்து வருகிறார். இதில் ஒரு பினாமி அவர் பெயரில் உள்ள நிலத்திற்கு மற்றொருவரிடம் அட்வான்ஸ் தொகை வாங்கி விடுகிறார். இந்தத் தகவல் தெரிந்தவுடன் பணத்தை கொடுத்து அந்த நிலத்தை மீட்டிருக்கின்றனர். அதே போல், தனது தி.மு.க. தொடர்பின் மூலம் பினாமிகளுக்கு பல்வேறு பணிகளையும் மறைமுகமாக எடுத்துக் கொடுக்கிறார்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இவர் மீது நடவடிக்கை எடுத்தால், சசிகலாவுக்கு ஆதரவாக பேசுவார். ஏற்கனவே, சசிகலாவின் தீவிர விசுவாசிதான் செல்லூர் ராஜு. இவர் பின்னால் அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் கிடையாது. இவர் மீது நடவடிக்கை எடுத்தாலும் இவர் பின்னால் யாரும் போகமாட்டார்கள் என்பதுதான் தற்போதையநிலை!
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றால், அக்கட்சியே இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மதுரை மாநகரில் அ.தி.மு.க. காணாமல் போய்விடும்’’ என்று குமுறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு பி.கே..! திமுகவுக்கு ஷோ டைம்... ‘வா ராசா வா... நீ யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்..’ பிரசாந்த் கிஷோருக்கு சவால்..!