24 மணி நேரம் கெடு: தமிழக கவர்னர் ரவி மௌனம் ஏன்? பல ஆண்டுகள் மௌனமாக இருக்க முடியுமா? இதை எப்படி எடுத்துக் கொள்வது? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
தமிழக அரசுடன் மோதல் போக்கு தொடர்பாக, கவர்னர் ஆர் என் ரவிக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது கவர்னர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விக்கணைகளை தொடுத்தது.

கவர்னர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்து இருந்த வழக்குகள் மீது இன்று இறுதி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: “காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!
இன்றைய விசாரணையின் போது "மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மௌனமாக இருக்கலாமா? அப்படி அவர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்க தவறியது குறித்து கவர்னருக்கு தங்களது அதிருப்தியையும் நீதிபதிகள் தெரிவித்தனர்
தொடர்ந்து "இது மக்களை பாதிப்பது மட்டுமின்றி அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துகிறது. பல ஆண்டுகள் இப்படி மௌனமாக அவர் இருக்க முடியுமா? இதனால் என்னென்ன தாக்கங்களை அது ஏற்படுத்தக் கூடும்?" என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும் அவர்கள் எழுப்பினார்கள்.
"நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை" என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லை எனில் அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும்? என்றும் உச்ச நீதிமன்றம் வினா எழுப்பியிருந்தது.

அதைத்தொடர்ந்து மாநில அரசால் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினால் அதன் மீது ஜனாதிபதி என்ன முடிவுகளை எடுக்கலாம்? என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், "மசோதாவை திருப்பி அனுப்பும் போது காரணத்தை கவர்னர் குறிப்பிடவில்லை" என்று பதில் அளிக்கப்பட்டது.
" ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய மசோதாவா என்பதை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். கவர்னர் தனது சுய முடிவையோ மத்திய அரசின் முடிவையோ எடுக்க முடியாது" என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அத்துடன் "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார். கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது கூட்டாட்சிக்கு முடிவு கட்டுவதாக அமையும்" என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடி வரும் வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வருகிறார். இரு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டதாக கருதப்படும் நிலையில் இந்த வழக்குகளில் முக்கிய உத்தரவு ஒன்றை நீதிபதிகள் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவம் - கட்டமைப்பிற்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
(தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் ஏன் என்பது குறித்தும் வழக்கு விவரங்கள் குறித்தும் முன் வந்துள்ள பதிவில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).
இதையும் படிங்க: கவலைக்கிடமாக உள்ளது தமிழகம்.. கொந்தளித்த ஆளுநர் ஆர்.என். ரவி.!