புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகி உள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன அன்றைய தினத்தின் இரவே இரண்டு மாணவிகளும் வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவிகளை அழைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மாணவிகள் இரண்டு பேரையும் புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்த குருசு குப்பத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற மெயின் வியாபாரியும், வைத்தி குப்பத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் மணி மாறன் என்பவரும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை உண்மை என நம்பி மாணவிகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரையும் கடற்கரைப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அன்று இரவு மாணவிகள் வீடு திரும்பி இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகள் இரண்டு பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், இரண்டு பேரையும் காப்பகத்தில் தங்க வைத்தனர்.பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறி புஷ்பராஜ் மற்றும் மணிமாறன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி நான்கு பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில், இரண்டு மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 பேர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளை சீரழித்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.