கன்னட திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் ரன்யா ராவ். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்திலும் நடித்துள்ளார். கர்நாடக போலீஸ் வீட்டுவசதித்துறை டி.ஜி.பி.யான ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளும் ஆவார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்த ரன்யா ராவ், டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ரன்யா ராவின் வீட்டில் நடத்திய அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கியது.

இந்த விவகாரம், கர்நாடகா அரசியலிலும் பயங்கரமாக எதிரொலித்தது. தங்க கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இந்த வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெற்றது. இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரன்யா ராவை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரித்தனர். நேற்றுடன் காவல் நிறைவு அடைந்தது. இதையடுத்து, அவர் பெங்களூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி விஸ்வநாத் கவுடர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிங்க: தங்கக் கடத்தலில் சிக்கிய நடிகைக்கு 17 ஏக்கர் நிலம்.. ஒதுக்கீடு செய்ததா கர்நாடகா அரசு..? சிபிஐ பிடி இறுகுகிறது..!

அப்போது நீதிபதியை பார்த்ததும் ரன்யா ராவ் திடீரென்று கண்ணீர் விட்டு அழுத தொடங்கினார். இதன் காரணமாக, விசாரணையின் போது உங்களுக்கு தொல்லை கொடுத்தனரா என்று நீதிபதி விஸ்வநாத் கவுடர் கேட்டார். அப்போது அழுதபடியே பேசிய ரன்யா ராவ், “விசாரணையில் எனக்கு தொல்லை கொடுக்கவில்லை: அவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால் என்னை மிரட்டும் தொனியில் பேசினர். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால், என்ன ஆகும் தெரியுமா? நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நடக்கும் என உங்களுக்கு தெரியும் என்று மிரட்டினர்.

மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டி தீர்க்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலில் உள்ளேன். அவர்கள் சில ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு நான் மறுத்துவிட்டேன். மற்றபடி விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்” என்றார். அப்போது வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'விசாரணையின் போது நாங்கள் ரன்யா ராவை மிரட்டவில்லை. கண்காணிப்பு கேமரா முன் வைத்து தான் அவரிடம் விசாரணை நடத்தினோம். தேவைப்பட்டால், அந்த காட்சிகளை கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம்' என்றனர்.

மேலும், “நாங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவர் பதில் தர மறுக்கிறார். ஒவ்வொரு முறையும் மவுனமாகவே இருக்கிறார். மொத்த விசாரணையையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம்” என வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல்கள் கோர்ட்டில் வாதாடினர். மேலும் ரன்யாவுக்கு எதிராக ஆஜரான விசாரணை அதிகாரி ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்த அவரிடம் என்ன பேச வேண்டும் என்பதை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவரும் அதை அப்படியே நடித்து காட்டுகிறார். அவரிடம் ஆதாரங்களை காட்டி கேட்டாலும் மவுனம் தான் பதிலாக உள்ளது என கூறினார். இது தொடர்பாக ரன்யா ராவின் வழக்கறிஞர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இறுதியாக வரும் மார்ச் 24-ம் தேதி வரையில் அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்கு எதிராக ஆட்சேபனை இருந்தால் மனு தாக்கல் செய்யலாம் என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். இதற்கிடையே, நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில், கர்நாடகாவின் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக, பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று சட்டசபையில் குற்றம் சாட்டினார்.

பதிலுக்கு, ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, பாஜ ஆட்சியில் தான் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது என்று, காங்கிரஸ் தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால், ரன்யா ராவ் விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ரன்யா ராவ் பயன்படுத்திய மொபைல் போனை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் பெயரை பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுடன் அடிக்கடி அவர் பேசியதும் தெரிந்தது. குறிப்பாக தொழில் அதிபரும், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருமான தருண் ராஜ் என்பவரிடம் அடிக்கடி ரன்யா ராவ் பேசியது தெரிந்தது. அவருக்கு ரன்யா ராவ் அடிக்கடி தங்கம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தருண் ராஜை தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 14.8 கிலோ தங்கம் கடத்திய வாகா பட நடிகை ரன்யா...! தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ்..!