தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிலையமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையவரும், 15க்கும் மேற்பட்ட நிலுவை வழக்குகளைக் கொண்ட குற்றவாளியுமான ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். காவல்துறை ஞானசேகரனிடம் விசாரணையைத் தொடங்கி இருந்த சமயத்தில், மாணவியின் எப்.ஐ.ஆர். வெளியானது. அதில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும்போது, நான் அழைக்கும்போதெல்லாம் போனில் பேசும் சாருடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த நபர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படும் 'சார்' என்பவர் யார் என கேள்விகள் எழுந்தன. குறிப்பாக அதிமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்து யார் அந்த சார்? என்ற போராட்டத்தைத் தொடங்கியது. கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்குள் திடீரென நுழைந்த அ.தி.மு.கவினர் 'யார் அந்த சார்?' என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறுநாளும் ‘யார் அந்த சார்?’ போராட்டத்தை அதிமுக மாநிலம் முழுவதும் நடத்தியது. அதிமுகவின் ‘யார் அந்த சார்?’ போராட்டம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.

தற்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முழு வீச்சில் கையில் எடுத்துள்ள அதிமுக, இன்று சட்டப்பேரவைக்குள்ளேயே யார் இந்த சார்? என பேட்ஜ் ஒட்டிய சட்டையை அணிந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அதிர வைத்துள்ளது. இதன் மூலமாக அதிமுக ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க திட்டமிட்டுள்ளது. முதலில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அ.தி.மு.க. தகுந்த எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, தீவிரமான போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என பேச்சுகள் இருந்த நிலையில், அதிமுக இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: துப்பட்டாவை கழட்டி வச்சிட்டு வாங்க; முதல்வர் பங்கேற்க நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நிகழ்ந்த அவலம்!

மற்றொருபுறம், பொள்ளாச்சி விவகாரத்திற்கு பதிலடியாக அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனையடுத்து 'அண்ணா அடிக்காதீங்கண்ணா ...' என இளம் பெண் கதறும் வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த வழக்கில் தொடர்புடையதாக அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்த அருளானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து முழுக்க முழுக்க அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன், அதிமுகவில் தொடர்புடையவர்களால் இந்தப் பாலியல் கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றச்சாட்டியது.
தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக அதிமுக, அரசு சீரழித்துள்ளதாகவும், அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள் என்றும் அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் கண்டன அறிக்கை கூட வெளியிட்டார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறியது. இதனை மேலும் தீவிரமாக்கும் நோக்கத்துடன் அதிமுக முக்கியப்புள்ளியான பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக திமுக குற்றச்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நிருபிக்கக்கூடிய ஆதாரங்கள் இல்லாததால், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீதான குற்றச்சாட்டு திமுக போட்ட நாடகம் என்பதும் பின்னாட்களில் அம்பலமானது.

தனது ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வைத்து மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய களங்கத்தை துடைக்கும் வகையில், தற்போது அவர் ஆட்சியில் கல்வி நிலைய வளாகத்தில் வைத்தே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் திமுக முக்கிய புள்ளிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருவதால், இந்த சம்பவத்திற்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக்கூடும் என அதிமுக சந்தேகிக்கிறது. அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகத் தான் யார் இந்த சார்? போராட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.
“பல்லுக்கு பல், சொல்லுக்கு சொல்” என்பது போல், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியலாக்கிய திமுகவின் உண்மை முகத்தை வெளிக்கொணர சபதம் ஏற்றிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துரிதமாக செயல்படும் படி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எடப்பாடி பழனிசாமியே நேரடி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் வழக்குகள் அதிகரிக்கின்றன என்ற குற்றச்ச்சாட்டு நீடித்து வருகிறது. இந்நிலையில் நாட்டையே அதிர வைத்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அதிமுக கையில் எடுத்திருப்பது திமுகவிற்கு மிகப்பெரிய அடியாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடியாகவும் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள்... “ஒருவர் அல்ல 4 பேர்”... அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி!