‘‘வாழ்க்கை நீண்டதாக இருக்க வேண்டும் என்பதை விட பெரியதாக இருக்க வேண்டும்...’’என்கிற எண்ணம் கொண்டவர் அம்பேத்கர். ஆனால் தனது பெயர் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். 65 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியல் கட்சிகள் அவரது மரபு தொடர்பாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன.
இந்நாட்களில் நாட்டின் அரசியல் டாக்டர் அம்பேத்கரை சுற்றியே சுற்றி வருகிறது. அரசியல் சாசனம், அம்பேத்கர் இரண்டையும் முன் வைத்தே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போதும் நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை முன் வைத்து அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ் கூட்டணி. ‘‘அம்பேத்கர் பெயரை தோளில் சுமந்துகொண்டு, காங்கிரஸ் எப்போதும் அரசியல் செய்வதாக’’ அமித் ஷா கூறியது பிரளயத்தை ஏற்பத்தி உள்ளது. அம்பேத்கரை இழிவுபடுத்தி விட்டதாக பா.ஜ.க.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. 
அம்பேத்கர் தொடர்பாக நேருக்கு நேர் காங்கிரஸ் - பாஜக இடையே மல்யுத்தம் நடந்து வருகிறது. நாடாளுமன்றம் முதல் வீதிகள் வரை, இரு கட்சியினரும், அம்பேத்கர் படத்தை வைத்து போராட்டம் நடத்தி, ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘என்னை நெருங்கி வந்தார்...’ பாஜக பெண் எம்.பி பரபரப்பு புகார்... எஸ்.சி-எஸ்டி சட்டத்தில் சிக்கும் ராகுல்காந்தி..?
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியாக இருந்தாலும் சரி, சந்திரசேகரின் ஆசாத் சமாஜ் கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முழு அரசியலும் அம்பேத்கரை அடிப்படையாகக் கொண்டது. அம்பேத்கரின் சிந்தனைகளை காங்கிரஸும், பாஜகவும் ஒருபோதும் பின்பற்றவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் விஸ்வநாத் பால், ‘‘அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதன் மூலம், பாஜக- காங்கிரஸ் கட்சியினர் அவரைப் பின்பற்றுபவர்களை தங்கள் மடியில் கொண்டு வர விரும்புகிறார்கள். இரு கட்சிகளும் அவரின் சிந்தனைகளைப் பின்பற்றவில்லை. அவரது அரசியலமைப்பை முறையாக செயல்படுத்தவில்லை. இரு கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. அம்பேத்கரை பாஜகவும், காங்கிரஸும் எப்படி அவமதித்தன என்பதை தலித் சமூகம் அறிந்திருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் போராடி வருகிறோம்’ உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்துள்ளார். நாங்கள் அமைதியாக இருக்கவில்லை. உயிர் சேதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. நாங்கள் எந்த விதமான ஆர்ப்பாட்டமோ, நாசவேலையோ செய்யவில்லை. ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என்று அர்த்தம் இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படி நாங்கள் போராடுகிறோம். அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவதற்குப் பதிலாக காங்கிரஸும், பா.ஜ.க.வும் அவரை முழுமையாக மதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியைப் போலவே சந்திரசேகரின் ஆசாத் சமாஜ் கட்சியும் பாஜகவை குற்றம்சாட்டியுள்ளது.. ஆனால், காங்கிரஸ் குறித்து சந்திரசேகர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சந்திரசேகர் கூறுகையில், 'உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு, மிகவும் மதிப்பிற்குரிய அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பையும், சமூக நீதிக்கான அவரது போராட்டத்தையும் அவமதிப்பதாகும். இது உணர்வின்மையின் அடையாளம் மட்டுமல்ல, சமூக ஒற்றுமை, ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் அறிகுறி.
இது மன்னிக்க முடியாதது. அம்பேத்கரை நம்புபவர்கள் இந்த அவமானத்திற்கு நிச்சயம் பழிவாங்குவார்கள். என் வார்த்தைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என ஆவேசப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், டாக்டர் அம்பேத்கரின் பேரனும், பகுஜன் வஞ்சித் அகாடியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கரும், காங்கிரஸும் பாஜகவும் பாபா சாகேப்புக்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ளார். பாஜக உருவாவதற்கு முன்பே, ஜனசங்கமும், ஆர்எஸ்எஸ்ஸும் அம்பேத்கரை எதிர்த்தன. பழைய மனநிலை கொண்டவர்கள். இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைமை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதும் உண்மை. காங்கிரஸ் தலைமை கூட பாபா சாகேப்பை ஏற்கவில்லை. பாஜக மற்றும் காங்கிரஸ் இருவருமே அம்பேத்கருக்கு எதிரானவர்கள்’’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக, காங்கிரஸ், பிஎஸ்பி, எஸ்பி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும், அம்பேத்கர் அனைவருக்கும் கட்டாயம். இதற்குப் பின்னால் வாக்குச் சமன்பாடு மறைந்துள்ளது. நாட்டில் தலித் அரசியல் இன்னும் அம்பேத்கரை சுற்றியே உள்ளது.
இந்தியாவில் தலித்துகளின் மக்கள் தொகை சுமார் 16 சதவீதம் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தலித் வாக்குகள் தீர்க்கமானவை. மக்களவை தேர்தலின் போது பெரும்பான்மையை பாஜக எட்ட முடியாமல் போனதற்கு தலித்துகளுக்கும் பங்கு உண்டு.
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தலித்களின் அரசியல் பலத்தை இப்போது புரிந்து கொண்டதால் தான் தலித் வாக்காளர்களை தங்கள் பக்கம் கொண்டு வர இரு கட்சிகளும் அம்பேத்கரை உரிமை கொண்டாடுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியாக இருந்தாலும் சரி, பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் வஞ்சித் அகாதியாக இருந்தாலும் சரி, அனைவரும் ஒரே குரலில் காங்கிரஸையும், பாஜகவையும் எதிர்ப்பதற்கு இதுவே காரணம். ஒவ்வொருவரும் தலித் வாக்கு வங்கியை உடைக்கும் அபாயத்தில் உள்ளனர். ஆகையால் அம்பேத்கர் மூலம் தலித் வாக்குகளை தங்களுக்கு கொண்டு வர காங்கிரஸும் பாஜகவும் முயற்சி செய்கின்றன.
இதையும் படிங்க: கட்சி தொடங்கியதையே மறந்து போனாரா விஜய்..? எதிரணிகள் கலாய்ப்பு... தவெக சிலாகிப்பு..!