பெரியார் குறித்த சர்ச்சைப்பேச்சு காரணமாக மாநிலம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ் தேசிய கொள்கை அடிப்படையில் இயங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பேசி வருகிறார். திராவிட இயக்கத்திற்கு எதிராக பேசி வரும் சீமான், திராவிட கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக மதிக்கப்படும் பெரியார் குறித்து கடுமையான விமர்சனத்தை சீமான் வைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு பேட்டியின் பொழுது பெரியார் பெண்கள் குறித்து பேசியதாக ஒரு அவதூறு கருத்தை திடீரென கூறினார்.
தனது கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆண்கள் தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ள தாய் மற்றும் சகோதரிகள் உடன் கூட உறவு வைத்துக் கொள்ளலாம் என்று பெரியார் சொன்னதாக சீமான் கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சீமான் கருத்துக்கு எதிராக தி.க., தபெதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சீமான் ஒரு கழிசடை, புதுப்பிராணி - சகட்டுமேனிக்கு சாடிய திமுக நாளிதழ் முரசொலி!

பெரியார் அவ்வாறு பேசவில்லை பெரியார் குறித்து அவதூறாக பேசும் பேச்சை சீமான் வாபஸ் பெற வேண்டும். அவர் பெரியார் பேசியது குறித்து ஆதாரத்தை வெளியிட வேண்டும் அல்லது அவர் செல்லும் இடமெல்லாம் முற்றுகை விடுவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ராமகிருஷ்ணன் அறிவித்து சீமான் வீட்டை முற்றுகை இட்டார். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரிதாக எதிரொலித்த நிலையில் ”பெரியார் குறித்த தமது பேச்சிலிருந்து பின் வாங்க போவதில்லை, ஆதாரத்தை என்னிடம் ஏன் கேட்கிறார்கள்? ஆதாரத்தை அவர்களே வைத்துக்கொண்டு என்னிடமம் கேட்கலாமா, பெரியாரின் நூல்களை ஏன் பொதுவுடமை ஆக்காமல் இருக்கிறார்கள், அதையெல்லாம் படித்தால் அவருடைய பிம்பம் ஒழிக்கப்படும்” என்றெல்லாம் சீமான் பதில் அளித்தார்.
பெரியார் சர்ச்சை பேச்சு குறித்து சில ஆதாரங்களை அவர் விடுதலையில் அவர் பேச்சு வெளியானதாக பழைய விடுதலை பேப்பர் கட்டிங் மற்றும் சிலர் பேசிய காணொளிகளை வெளியிட்டனர். ஆனாலும் பெரியார் அவ்வாறு பேசவில்லை என்பதே பலருடைய பொதுவான கருத்தாக இருந்தது. பெரியார் குறித்து அவதூறாக பேசியது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சீமானின் அவதூறு பேச்சு குறித்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய கேட்டிருந்தார்.

ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மறுத்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கிளையில் அவர் இது குறித்து வழக்கு பதிவு செய்யக்கோரி மனு அளித்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்தது. சீமானின் நோக்கம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதாக உள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான பல்வேறு வழக்கறிஞர்கள் வாதத்தை வைத்தனர்.
”இதுபோன்று பேசுவது சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதாக உள்ளது, பெரியார் பெண்கள் கல்வி, பெண் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே, எனவே சீமான் இதுப்போன்று பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்த நீதிபதி நிர்மல்குமார் “சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பெரியார் குறித்து பேசிவருகிறார், இது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஆகவே மனுதாரர் புகாரை ஏற்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை காவல்துறை ஜன 20 ஆம் தேதி பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்”. என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் சென்னையில் திமுக சார்பில் சீமானின் பேச்சு குறித்து நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஊடகங்களும் இதை விவாதப்பொருளாக மாற்றி வரும் நிலையில் தொடர்ந்து இது விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை கைது செய்யும் முனைப்பில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சீமானை கைது செய்தால் பின் விளைவுகள் என்ன ஆகும், அவரை கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்பது குறித்து லீகல் ஒப்பீனியன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சீமான் பேச்சு பதற்றத்தை ஏற்படுத்தும் செயல், அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதால் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று மாலைக்குள் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. காரணம் இன்று கைது செய்யப்பட்டால் அடுத்து வரும் நான்கு நாட்கள் நீதிமன்றம் விடுமுறை தினம் என்பதால் பெயில் கிடைப்பதில் சிக்கல் வரும், அதனால் 16 ஆம் தேதிக்கு மேல் பெயில் பெட்டிஷன் எடுக்கப்படும் என்ற கருத்து வைக்கப்படுகிறது.
அதேப்போல் சீமான் கைது செய்யப்பட்டால் ஒவ்வொரு காவல் நிலையமும் கைது செய்யும் கஸ்டடி கேட்கும், இது அல்லாத மேலும் சில வழக்குகளிலும் கைது செய்யும் நடவடிக்கைகள் தமிழகம் முழுவது நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பிருக்கும் அதே நேரத்தில் சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அவரை அவ்வளவு சாதாரணமாக மற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் போல் நடத்திவிட முடியாது.
நீதிமன்றமும் அப்படி பார்க்காது, இதனால் புது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதையும் நீதிமன்றம் விரும்பாது என்கிற கருத்து மூத்த வழக்கறிஞர்களால் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் சட்ட ஆலோசனைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
இதையும் படிங்க: சீமானுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் சோகம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்!