இந்த டிஜிட்டல் யுகத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை உலகம் முழுவதும் பரவலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் மலேசியாவில் இருக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், வாரத்தில் ஐந்து நாட்கள், தினசரி 700 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பறந்து சென்று வேலைக்கு சென்று வருகிறார். வளர்ந்து வரும் இரு குழந்தைகளுக்கு அவர் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
'சூப்பர் கம்ப்யூட்டர்' என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் பெயர், ரேச்சல் கவுர். மலேசியாவில் உள்ள "ஏர் ஆசியா"நிறுவனத்தில் நிதி நடவடிக்கைகளில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் கோலாலம்பூரில் தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மலேசியாவின் ஒரு மாநிலமான பினாங்கிற்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயணம் செய்து வேலைக்கு சென்று வந்தார்.

அவருக்கு 12 மற்றும் 11 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஐந்து நாட்கள் குழந்தைகளை பார்க்காமல் வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி இருந்து வந்தது அவருக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால்தான் தினசரி விமானத்தில் வேலைக்கு சென்று வரும் இந்த 'மிகப்பெரிய' முடிவை அவர் எடுத்த நேர்ந்தது என்று கூறுகிறார்.
இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் - எடப்பாடி ரகசிய சந்திப்பு,,!! திமுகவுக்கு வேலை செய்த ஊழியர்களை மடக்கும் பிகே டீம்
கடந்த ஆண்டு (2024) தொடக்கத்தில் இருந்து தினமும் விமானத்தின் மூலம் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பி தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். 'சேனல் நியூஸ் ஆசியா' (சி என் ஏ) சேனலுக்கு அளித்த நேர்காணலில், தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.
பார்ப்பவர்களுக்கு தினசரி இப்படி விமானத்தில் சென்று வருவது அந்தப் பெண்ணுக்கு மிகுந்த சிரமமாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால் அவர் ஆச்சரியப்படும் வகையில், "இந்த புதிய வழக்கம் தனது வேலையை மட்டுமல்ல; தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது" என்று கூறி இருக்கிறார்.

"எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் வளரும் இளம் பருவத்தினர். இதன் காரணமாக தாய் என்ற முறையில் நான் அடிக்கடி அருகில் இருந்து அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்கிறேன். இந்த புதிய ஏற்பாட்டின் மூலம் ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு திரும்பி அவர்களை பார்க்க முடிகிறது" என்று மகிழ்ச்சியுடன் ரேச்சல் கவுர் கூறினார்.
எல்லோருக்கும் இருப்பது போல் அதிகாலையில் நாலு மணிக்கு வேலைக்காக அவர் எழுந்திருக்க வேண்டியது தான் கொஞ்சம் சிரமம் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். நாலு மணிக்கு எழுந்து தயாராகி அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு புறப்படுவதாகவும், பின்னர் பினாங்கு விமான நிலையத்திற்கு காரில் சென்று அங்கிருந்து காலை 6:30 மணிக்கு கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

காலை 7:45 மணிக்கு தனது அலுவலகத்தை அடையும் அவர், வேலை முடிந்து இரவு 8 மணிக்குள் வீடு திரும்பி விடுகிறார். அவர் தினமும் வேலைக்காக சென்று திரும்பும் தூரம் ஏறத்தாழ 700 கிலோமீட்டர் ஆகும். வாரத்தில் ஐந்து நாட்கள் விமானத்தில் பயணம் செய்தாலும், தனது செலவுகள் என்னவோ குறைந்து விட்டதாகத்தான் அவர் கூறுகிறார்.
விமான பயணங்களின் போது இசையை கேட்பதிலும் ஏற்கனவே ரசிப்பதிலும் தனக்கான நேரத்தை அனுபவித்துக் கொள்வதாக கூறும் அவர் விமானம் தரை இறங்கியதும் அங்கிருந்து தனது அலுவலகத்திற்கு 5 முதல் 10 நிமிட நடை பயணத்தில் சென்று விடுகிறார்.
வீட்டில் இருந்து வேலை செய்வதை விட அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதையே அவர் மிகவும் விரும்புகிறார். "சக ஊழியர்கள் சூழப்பட்டு இருக்கும் நிலையில் பணிகளை முடிப்பது எளிதாகிறது" என்று, இது குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

"சக பணியாளர்களுடன் சூழப்பட்டு இருப்பது வேலைகளை எளிதாக செய்து முடிக்க உதவுகிறது. மக்களுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது" என்று கூறும் அவர், வேலையில் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும் , வீடு திரும்பியவுடன் தனது குடும்பத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவருடைய இந்த விமான பயண சேவைக்கு "ஏர் ஆசியா" ஆதரவளிக்கு வருகிறது. அதிகாலையில் எழுந்திருப்பது சோர்வாக இருப்பதை அவர் ஒப்புக் கொண்டாலும், "வீடு திரும்பி தனது குழந்தைகளை பார்த்தவுடன் சோர்வெல்லாம் பறந்து விடும்" என்று, புன்னகைக்கிறார், அந்த "சூப்பர் கம்ப்யூட்டர்" ரேச்சல் கவுர்!
இதையும் படிங்க: அலுவலகத்தில் மது பானம்- ஹேங் ஓவர் விடுமுறை: சலுகைகளை வாரிவழங்கும் நிறுவனம்..!