தமிழ்நாடு அரசுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வருகிறது.
இதற்கிடையில், கவர்னருக்கு எதிராக வழக்கறிஞர் ஜெய சுகினும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், “அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் சாசனத்தின்படி அமைச்சரவையின் வழிகாட்டுதலோடு ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும், ஆனால் கவர்னர் ரவி அவ்வாறு செயல்படுவதில்லை” என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: சீமான் இப்படி பேச காரணமே விஜய் தான் ...! கொளுத்தி போட்ட புகழேந்தி...!
இதை விசாரித்த நீதிபதிகள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கின் உரையை படிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், சட்டப்பேரவையை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், “ஆளுநரை திரும்ப பெற கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்று எங்களால் உத்தரவிட முடியாது. நாங்கள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
"கவர்னர் – அரசு தொடர்பாக எப்போது பிரச்சினைகள், முரண்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பித்து வருகிறது. எனவே இம்மனுவை ஏற்க முடியாது" என்றும் அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டனர். தமிழக கவர்னர் தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கை விசாரித்து வருவதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தள்ளுபடி; "உயர் நீதிமன்றத்தை நாடும்படி" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்