ஜாப் ராக்கெட் வழக்கில் உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை உயிர்ப்பித்த பொழுது அமலாக்கத்துறை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி சோதனை நடத்தி பின்னர் செந்தில் பாலாஜியை கைது செய்ததையும், அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் நடு இரவு தொடங்கி காலை வரை நேரில் சென்று பார்த்ததும், தொலைக்காட்சிகளில் வெளியானது. காலையில் அவரது மனைவி செந்தில் பாலாஜியை நேரில் மருத்துவமனையில் சென்று பார்த்த நிலையில் (ஹேபியஸ் கார்பஸ்) ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதே நேரம் செந்தில் பாலாஜி வழக்கில் அவரை கைது செய்ததாக விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்க அதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் ஜாமீன் கோரி விசாரண நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் சட்ட வல்லுனர்கள் செயல்பாடு கேலிக்குள்ளானது. காரணம் இது பற்றி பின்னர் நடந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அளித்த தீர்ப்பில் இதை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி இருந்தார்.
இதையும் படிங்க: ED-யால் தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி... அவசர அவசரமாக டெல்லி பயணம்... திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

ஒருவரை மீட்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் நீங்கள் அதே நேரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறீர்கள். ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்வதன் மூலம் கைது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள், அதே நேரம் செந்தில் பாலாஜி குறித்து ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டார். இந்த முரண் பற்றி நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த நேரத்தில் ஜாமீன் கேட்காமல் கைது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றத்தில் போனதால் ஜாமீன் கேட்பதில் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதுபோன்ற பல விஷயங்கள் செந்தில் பாலாஜி வழக்கில் முரணாக இருந்ததை சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதன் பின்னர் அந்த வழக்கில் அமலாக்கத்துறை அத்துமீறுகிறது, மாநில உரிமைகளை மீறுகிறது, அமலாக்கதுறையில் நடவடிக்கை சட்டவிரோதம், கஸ்டடி கொடுக்க கூடாது என்றெல்லாம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது அதையெல்லாம் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதே போன்றதொரு நிகழ்வுதான் தற்போது டாஸ்மாக் விவகாரத்திலும் தமிழக அரசு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. டாஸ்மாக் ரெய்டு மூன்று நாட்கள் நடந்தது. அதில் அமலாக்கத்துறை பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், செல்போன்கள், கோப்புகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிச் சென்றது. இந்த ரெய்டு மூன்று நாட்கள் நடந்த பொழுது பல்வேறு கேள்விகள், விசாரணைகள் நடத்தியதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது என அமலாக்கத்துறை பின்னர் செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது.
அதில் முக்கியமாக தமிழகம் முழுவதும் வெளிப்படையாக குற்றச்சாட்டாக உள்ள பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டையும் அமலாக்கத்துறை வைத்திருந்தது அதேபோல் டெண்டர் கோருவதில் உள்ள முறைகேடுகள், ஒரே ஒருவருக்கு மட்டும் டெண்டர் ஒதுக்கியது, சட்டவிரோத பார்கள், மதுபான ஆலைகள் பாட்டிலிங் கம்பெனிகள் நேரடியாக கைகோர்த்து அதன் மூலம் ஈட்டிய தொகைகள், நேரடியாக மதுபானங்களில் இருந்து சப்ளை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தது.

இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்த போது தவறு செய்த ஊழியர்கள் மீது நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம், வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அமலாக்கத்துறை தனியாக ஏன் ரெய்டு நடத்த வேண்டும் என்று அந்த விஷயத்தை மிக எளிதாக கடந்து சென்றார். அதேபோன்று ஊழியர்கள் தவறு செய்தால் மேலதிகாரிகள் என்ன செய்வார்கள் என்றும் விஷயத்தை எளிமைப்படுத்தினார்.
ஆனால் அமலாக்கத்துறை ஒரு வழக்கில் ரெய்டுக்கு வருகிறது என்றால் மூல வழக்கு (Predicated affence) என்று ஒன்று இருக்க வேண்டும். இந்த ரெய்டு விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் PC Act (Prevension of corruption Act) கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த பிரிவுகளின் கீழே தாங்கள் ரெய்டு வந்ததாகவும் அமலாக்கத்துறை பதிலளித்திருந்தது. அது மட்டுமல்லாமல் போஸ்டிங், டிரான்ஃபர் உள்ளிட்ட விவகாரங்களும், டெண்டர் ஒதுக்கீடு, சட்டவிரோதப்பார்கள் உள்ளிட்ட ஆதாரங்களிலும் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இவைகள் ஊழியர்கள் செய்யக்கூடிய செயல்களா? என்கிற கேள்வியும் சட்ட அறிந்தவர்களால் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு அமலாக்கத்துறை ரெய்டை எதிர்த்து சட்ட விரோதமாக அறிவிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் பல்வேறு விஷயங்கள் சாதாரணமாக மேம்போக்காக உள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதையே உயர் நீதிமன்றமும் கருத்தாக வைத்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் அமலாக்கத்துறை ரெய்டு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிற வாதத்தை வைத்துள்ளது.
அதேபோன்று அமலாக்கத்துறை பல ஆவணங்களை கைப்பற்றி உள்ளது செல்போன் டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி உள்ளது இது மனித உரிமை மீறல் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இதே போன்ற வாதத்தை தான் செந்தில் பாலாஜி வழக்கிலும் தமிழக அரசு வைத்தது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொதுவாக ரெய்டு நடக்கும்பொழுது ரெய்டுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சி அடைந்த யுகத்தில் செல்போன்கள், லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்குகள், சர்வர்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவைகள் எல்லாம் சட்டவிரோதம் என்று தமிழக அரசு கூறுவது எப்படி சரியாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக காவல்துறையினர் சாதாரண வழக்குகளில் கைது செய்யும்பொழுதே செல்போன்களை பறிப்பதும் அவைகள் உள்ளே உள்ள விவகாரங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ள நிலையில் தமிழக அரசு எந்த அடிப்படையில் இது போன்ற ஒரு கோரிக்கையை வைக்கிறது என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.
”ED-யின் இந்த நடவடிக்கை TASMAC மற்றும் தமிழக அரசின் மீது மக்களிடம் எதிர்மறையான கருத்துகளை உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது. மதுபான விநியோகம், விற்பனை மற்றும் நிர்வாகம் என்பது மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய விஷயம். ED தன்னிச்சையாக அதிகாரம் செலுத்தியுள்ளது” என தமிழக அரசின் மனுவில் உள்ளது.

மொபைல் போன்கள் பறிமுதல் மற்றும் தகவல் திருடல் என குறிப்பிட்டு, ”அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து, எந்த விதமான அனுமதியும் இல்லாமல் தகவல்களை திரட்டி, அவற்றைப் பயன்படுத்தினர். பணியாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்து, அனுமதியின்றி டிஜிட்டல் தகவல்கள் பிரதி எடுக்கப்பட்டன” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

”ED-ன் இந்த நடவடிக்கை மூலம் தமிழக அரசின் நிர்வாகத்துக்கு இடையூறாக செயல்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த predicate குற்றங்களை ஆய்வு செய்ய, மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தின் பிணைப்பை மீறுகிறது. TASMAC மேலாண்மை அதிகாரிகளிடமிருந்து 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, அவர்களை கட்டாயமாக பதிலளிக்க வைத்தனர். ED மூன்று நாட்கள் சோதனை செய்தும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் காணவில்லை, இது "fishing enquiry" என்று கருதப்படுகிறது.TASMAC மற்றும் தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் ED இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது”. எனவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இந்த வாதங்களில் வலுவில்லை அவைகள் மனுவில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது, மற்றப்படி வலுவான வாதங்களாக இல்லை, இதைத்தான் நீதிமன்றம் உங்கள் கேள்வி என்ன மனு பொத்தாம் பொதுவாக உள்ளது எனக்கூறி ”மாநில அரசு அனுமதி பெற்று தான் சோதனை நடத்த வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து, மனுவை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளதை குறிப்பிடுகின்றனர்.

தமிழக ஐஏஎஸ் அதிகாரி விசாகன், பொதுமேலாளர் சங்கீதாவின் செல்போன்கள், ஜிமெயில் விவரங்களை பறிமுதல் செய்ததாகவும் அரசு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இவைகளில் எந்த நிவாரணமும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. காரணம் வழக்கு PMLA Act கீழ் பதிவு செய்யப்பட்டு ரெய்டு நடத்தப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்கின்றனர். டாஸ்மாக் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நிவாரணம் காண அரசு முயற்சித்தால் அதற்கான வலுவான வாதங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரிய அளவில் தமிழக அரசுக்கு நிவாரணம் கிடைக்காது என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: மார்ச் 25 வரை டாஸ்மாக் மீது மேல் நடவடிக்கைக் கூடாது.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!