ஞாயிற்றுக்கிழமையும் பணியாற்ற வேண்டும், வீட்டில் அமர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மனைவியின் முகத்தையே பார்க்க முடியுமா என்று லார்சன் அன்ட் டூப்ரோ(L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்என் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்போஸிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி ஊழியர்கள் அனைவரும் வாரத்துக்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனமும், கேலியும், கிண்டலும், மீம்ஸும் வெளியாகின.
இப்போது எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் வாரத்துக்கு 90 மணிநேரம் பணியாற்ற வேண்டும் எனக் கூறியிருப்பதைப் பார்க்கும்போது நாராயண மூர்த்தியே பரவாயில்லை என்று சமூக வலைத்தளத்தில் பயனாளிகள் கிண்டல் செய்து விமர்சித்து வருகிறார்கள். லார்சன் அன்ட் டூப்ரோ(L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்என் சுப்பிரமணியன் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது அதில் அவர் பேசுகையில் “லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவன ஊழியர்களை வாரத்துக்கு 90 மணிநேரம் பணியாற்ற வைக்க முடியாததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், என் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமையும் பணியாற்றினால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நானும் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றுகிறேன்.

ஞாயிற்றுக்கிழமையன்று விடுப்பு எடுத்து ஊழியர்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள். உங்கள் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தொடர்ந்து பார்க்க முடியும், வீட்டில் உள்ள மனைவியும் எவ்வளவு நேரம் கணவன் முகத்தை தொடர்ந்து பார்க்க முடியும். அலுவலகத்துக்கு வாருங்கள், வேலையை தொடங்குங்கள். அமெரிக்காவின் பொருளாதாரத்தைவிட சீனா வளர்ந்து வருகிறது என்றால், அந்நாட்டின் பணியாற்றும் கலாச்சாரம்தான். சீன மக்கள் வாரத்துக்கு 90 மணிநேரம் பணியாற்றுகிறார்கள், அமெரிக்க மக்கள் வாரத்துக்கு 50 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இதேபோலவே லார்சன் அன்ட் டூப்ரோ ஊழியர்களும் பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
உலகின் முதலிடத்துக்கு நீங்கள் வரவேண்டும் என விரும்பினால், வாரத்துக்கு 90 மணி நேரம் நீங்கள் பணியாற்ற வேண்டும், இதுதான் மந்திரம். இவ்வாறு சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்.. 2-வது நாளாக மீட்பு பணிகள் தீவிரம்..

ஆனால், லார்சன் அன்ட் டூப்ரோ தலைவர் பேசிய வீடியோ வெளியாகிய சில மணிநேரத்தில் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனமும், கிண்டல்களும், மீம்ஸ்களும் வலம் வருகின்றன.
ரெட்டிட் தளத்தில் ஒரு பயணாளி குறிப்பிடுகையில் “லார்சன் அன்ட் டூப்ரோ தலைவர் சுப்பிரமணியனுக்கு இன்போஸிஸ் நாராயணமூர்த்தியே பராவாயில்லை. நாராயணமூர்த்தி 70 மணிநேரம் போதுமென்றால், இவரோ 90 மணிநேரம் வேலை செய்யுங்கள் என்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனாளி குறிப்பிடுகையில் “ ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைவாக ஊதியம் பெறுவோருக்கு குறைந்த நேரமும், அதிக ஊதியம் பெறுவோருக்குஅதிக நேரமும் பணியாற்றும் விதத்தில் அட்டவணை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொருவர் “லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் இளைஞர்களையும், பணியாளர்களையும் சுரண்டக்கூடியது. இளைஞர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியம் அளித்துவிட்டு, வாரத்துக்கு 6.5 நாட்கள் பணியாற்ற வைக்கும், அடிப்படை வசதிகள் கூட இருக்காது. நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு 7 நாட்கள்தான் விடுப்பு கிடைக்கும், சொந்த ஊருக்கோ அல்லது குடும்பத்தைப் பார்க்கவோ செல்ல முடியாது” என வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யூஜிசிக்கு எதிராக திமுக தீர்மானம்..அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம் .. கண்டித்து வெளியேறிய பாஜக!