உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். சுமார் 55 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர். 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா என்பதால், பல வழிகளில் இந்த புனித விழா வரலாறு படைத்தது. நேபாளம், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, கனடா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், மலேசியா, நியூசிலாந்து, இத்தாலி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

இத்தகைய சிறப்பு மிக்க கும்பமேளாவில் பயங்கவாதிகள் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்துள்ள தீவிரவாதி ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அந்த பயங்கரவாதியை உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்தவன் லஜர் மசி. இவன் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் தலைவர் ஸ்வர்ன் சிங் என்கிற ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 75 ஆயிரம் போலீசாருக்கு 10 ஆயிரம் போனஸ்; ஒரு வாரம் விடுப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்...!

மேலும் இவனுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஜர் நேரடி தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லஜர் மசி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்ற காவலில் இருந்து தப்பிச் சென்ற லஜர் மசியை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், லஜர் மசி, உத்தர பிரதேசத்தின் கவுஷாம்பி மாவட்டத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பஞ்சாப் போலீசாரும் உத்தரபிரதேச சிறப்புப் படை போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் அதிகாலை 3.20 மணியளவில் லஜர் மசியை கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

லஜர் மசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகா கும்பமேளாவின் போது தாக்குதல் நடத்த லஜர்மசி திட்டம் தீட்டியது தெரிந்தது. ஆனால் அங்கிருந்த உச்சக்கட்ட பாதுகாப்பு காரணமாக அவனால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்றும் விசாரித்து வருவதாக உத்தர பிரதேச காவல் துறை தலைவர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துடைப்ப கட்டையை தூக்கிய 15000 பேர்..! கும்பமேளாவில் புதிய கின்னஸ் முயற்சி..!