தமிழகத்தின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையில் ரூ.992 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன் அவசர அவசரமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் போக்குவரத்து ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளுக்கு இறுதி செய்தது. இறுதி செய்யப்பட்ட போக்குவரத்துக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததோடு ஒன்றிய அரசு நிபந்தனை மற்றும் வழிகாட்டுதலின்படியும் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மண்டல வாரியாகப் போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக ஐந்தாண்டுகளுக்கு மாநில அளவில் ஒப்பந்தம் போடப்பட்டதால் ஒன்றிய அரசு போக்குவரத்துக்கான தொகையை விடுவிக்காமலிருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முறைகேடாகப் போடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் கடந்த ஆட்சியில் முறைகேடாகப் போடப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூ.2,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்றிய அரசு வழிகாட்டுதலின் படி போக்குவரத்துக்கான ஒப்பந்தப்புள்ளி மண்டல வாரியாக இரண்டாண்டுகளுக்கு கோரப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் மாவட்டங்களில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு உள்ளூர் நிலைமைக்கேற்ப தற்காலிகமாக மாவட்ட அளவிலான போக்குவரத்துக் கட்டண நிர்ணயக் குழு தெரிவித்த கட்டணம் கொடுத்து போக்குவரத்து இயக்கம் செய்யப்பட்டது.
பின்பு 39 மண்டலங்களுக்கும் (38 மாவட்டங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக வசதிக்காக 39 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன) தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு நிபந்தனைகளை நிறைவு செய்த ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பிற மாநிலங்களின் கட்டண விகிதம் மற்றும் சந்தை நிலவரத்தையொட்டி மாநில அளவிலான குழு கட்டணத்தை இறுதி செய்தது.

அதனடிப்படையில் மண்டல அளவில் போக்குவரத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, 15.06.2024 முதல் மண்டல வாரியாகக் குறைந்த விலைப்புள்ளி அளித்த போக்குவரத்து நிறுவனங்களுக்குப் போக்குவரத்து செய்திட ஆணை வழங்கப்பட்டது. 15.06.2024 முதல் 28.02.2025 வரை இவர்களுக்கு அனைத்து மண்டலங்களிலும் வழங்கப்பட்ட தொகை ரூ.428.40 கோடி ஆகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பட்டியல் கட்டணம் (SOR) பெறப்பட்டதில் குறைந்த பட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.273/-, அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.479/- என்றிருந்தது. மாநில அளவிலான குழு இதன் சராசரியை ரூ.360/- எனக் கணக்கிட்டு அதிலிருந்து 20% குறைத்து ஒப்பந்தப் புள்ளியில் குறைந்தபட்ச கட்டணம் பெற வேண்டும் என்ற நோக்கில் 17.08.2022 அன்று மாநிலக் குழுவால் பட்டியல் கட்டணம் (SOR) ரூ.288/- என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆதலால் குறைந்த விலைப்புள்ளி பெற வேண்டும் என்ற நோக்கில் நிர்ணயிக்கப்பட்ட தொகை இது என்பதைப் புரிந்து கொள்ளாமல், உண்மைக்கு மாறான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: JUST IN: ரேஷன் துறையில் ரூ 992 கோடி ஊழல்..! சிபிஐ, ED, வருமான வரித்துறை இடம் புகார்

மாநிலக் குழுவின் தலைவராக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளரும், குழு உறுப்பினர்களாக இந்திய உணவுக் கழக செயல் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், இந்திய உணவுக் கழகப் பொது மேலாளர் (தெற்கு), மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியர் திருவாரூர், அரசு துணைச் செயலாளர் (நிதித்துறை) மற்றும்
அரசு துணைச் செயலாளர் (போக்குவரத்துத் துறை) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அறப்போர் இயக்கம் குறிப்பிட்டது போன்று இந்திய உணவுக் கழகத்தின் செயல் இயக்குநர் விடுப்பில் செல்லவுமில்லை, வேறு ஒருவர் அவர் சார்பில் கையொப்பமிடவில்லை. அவரே ஒவ்வொரு குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு கையொப்பமிட்டுள்ளார்.
சிலருக்காக ஒப்பந்த விதிகள் திருத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி மாநில அளவிலான குழு விதிகளை வகுத்துள்ளது. மேற்படி ஒப்பந்தப்புள்ளியில் 131 ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், மேற்கண்ட போக்குவரத்து ஒப்பந்தத்தினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எண்கள்.21944/2024, 21946/2024 மற்றும் 23628/2024 ஆகியவற்றை மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 18.02.2025 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, எட்டரை மாதங்களுக்கு மொத்தமே ரூ.428 கோடி செலவான நிலையில் இரண்டாண்டுகளுக்கு ரூ.992 கோடி ஊழல் என்பதை விவரம் தெரியாதவர்களே ஏற்க முடியாத நிலையில் விவரம் அதிகம் தெரிந்ததாக 565 பக்கத்திற்கு அறிக்கை கொடுக்கும் இயக்கம் எவ்வாறு கூறுகிறது என்பது புரியாத புதிர். இதை வைத்துப்பார்க்கும் போது சரியாக எதையும் தெரிந்துகொள்ளாமல் யூகத்தின் அடிப்படையிலே அவர்களால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பருப்பு மற்றும் பாமாயிலை அதிக விலையில் கொள்முதல் செய்ததைக் கருத்திற்கொண்டு அதனைத் தவிர்க்கும் விதமாக அதிகமானவர்கள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொள்ள வழிவகை செய்து பாமாயில் மற்றும் பருப்பினைச் சரியான விலையில் கொள்முதல் செய்து அரசுக்குத் தொடர்ந்து செலவு குறைக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்துக் கட்டணத்தில் மட்டும் அரசுக்கு ரூ.2000 கோடி மீதமானது. பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் அதிமுக ஆட்சியில் இறுதியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து மீண்டும் கொள்முதல் செய்த ஒரு ஒப்பந்தப்புள்ளி மூலம் மட்டுமே அரசுக்கு ரூ.177 கோடி மீதமானது. நிலைமை இவ்வாறிருக்க கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற முறைகேடுகள் பற்றி வாயே திறக்காத சில அரசியல் கட்சித்தலைவர்கள் இப்போது தேவையற்ற வகையில் அறிக்கை விடுகிறார்கள். இந்திய உணவுக் கழக அலுவலர்களையும் மாநில அரசு அலுவலர்களையும் கொண்ட குழு முடிவு செய்ததை அறப்போர் இயக்கம் அறிந்தோ அறியாமலோ பாஜக அரசும் மாநில அரசும் சேர்ந்து அதிக கட்டணத்துக்கு ஒப்பந்தம் போட்டது போல் அரசியல் சாயத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
அறப்போர் இயக்கம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பொதுவெளியில் பரப்பியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். தரமான அரிசியையும் இதர இன்றியமையாப் பொருட்களையும் தாயினும் சாலப்பரிந்து காலத்தே வழங்கி வரும் நம் அரசைப் பொது மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களுமே பாராட்டுவதைக் கூட அறியாமல் ரேசனில் சரியாகப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று அறப்போர் இயக்கம் கூறியிருப்பது விநோதமாக உள்ளது. முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு உணவுத்துறையில் வெளிப்படைத்தன்மையுடன் செய்துள்ள அனைத்துச் செயல்களாலும் பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வரும் சூழலில் போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்துத் திடீரென்று எதற்காக அறிக்கை விடுகிறார்கள் என்பது தெரியவில்லை.

நம் ஒப்பற்ற முதலமைச்சர் தலைமையிலான கழக அரசின் ஆட்சியில் போக்குவரத்தாக இருந்தாலும் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் முடிவு செய்யப்படுகிறது.
“போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்”! என்பதற்கேற்ப முதலமைச்சர் தலைமையில் மக்களுக்கு ஏற்றம் தரும் செயல்களைத் தொடர்ந்து செய்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கும் பணியில் மட்டுமே கவனமாக இருப்போம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்மொழி கல்வி விஷயத்தில் ஒரே நாடகம்.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி ராமதாஸ்!