திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்டவர் நரேஷ் குமார். இவர் நேற்று முன்தினம் திருமலை திருப்பதி ஏழுமலையானை வழிபட வி.ஐ.பி. தரிசனத்தில் சென்றார். தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. இதில் ஏழுமலையான் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள பித்தளை கேட்டை மிக முக்கிய பிரமுகர்கள், கோயிலில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்கள் தவிர எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் திறக்க கூடாது என்பது சமீப காலத்தில் தேவஸ்தானம் சார்பில் உத்தரவிடப்பட்டது.

ஆனால் இதனை அறியாமல் ஏழுமலையானை தரிசித்த பின் அங்கு வந்த அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமார், அந்த கேட்டை திறக்கும்படி அங்கு பணியில் இருந்த ஊழியர் பாலாஜியிடம் கூறினார். ஆனால் ஊழியர் பாலாஜி இது உயர் அதிகாரிகளின் உத்தரவு. எனவே கேட்டை திறக்க இயலாது நீங்கள் பக்தர்கள் செல்லும் வழியில் வெளியில் சென்று விடுங்கள் என்று கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமார் ஊழியர் பாலாஜியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மேலும் நான் அறங்காவலர் குழு உறுப்பினர்.. நான் உத்தரவிட்டால் செய்ய வேண்டியது உன்னுடைய கடமை? என்று கூறினார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!



ஆனாலும் ஊழியர் பாலாஜி அந்த கேட்டை திறக்க மறுத்துள்ளார். உயர் அதிகாரிகள் உத்தரவை அப்படியே கடைபிடித்துள்ளார். ஏதோ சச்சரவு நடப்பதை அறிந்த மற்ற காவலர்கள் அங்கு வந்து, இருவருக்கும் இடையில் சமாதானம் செய்தனர். அதன் பிறகு அறங்காவலர் குழு உறுப்பினர் நரேன், முக்கிய பிரமுகர்கள் வெளியே செல்லும் பித்தளை கேட்டிங் வழியே வெளியே சென்றார். இந்த வீடியோ சமூக வளைதளத்திலும் ஊடகத்திலும் வைரலானது. இந்த நிலையில் தேவஸ்தான ஊழியரை வாயில் வந்தபடி திட்டிய அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தேவஸ்தான ஊழியர் சங்க கூட்டமைப்பினர் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்கும் பணியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஈடுப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர் சங்கத்தினருக்கு உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தை ஆந்திர மாநில அரசும் சீரியஸாக எடுத்துக் கொண்டு இது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து வருகிறது. இதனால் தேவஸ்தான அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலுக்கு பக்தர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் வி.ஐ.பி.க்களுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்பினர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி #SaveTirumalaFromTDP என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு, இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் முன்னிலையில் இருப்பதை மறந்துவிட்டு அந்த ஊழியரை நரேஷ் குமார் திட்டுகிறார். இவ்வளவு நாகரிகமற்றவர்களுக்கு தேவஸ்தான் அங்காவலர் குழு உறுப்பினர் பதவியை நீங்கள் கொடுத்தீர்கள். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களே இது உங்களுக்கு அவமானம்" என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூறி உள்ளது.
இதையும் படிங்க: கோடிக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மகா கும்பத்தில் பிரதமர் மோடி... விஐபிகள் வருகையால் 'பிதுங்கல்ராஜ்'ஆகப்போகும் பிரயாக்ராஜ்..!