''என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்'' என தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் கூறியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும். மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய படி பேச வாய்ப்பு கேட்டு, கை நீட்டியபடி அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் நடந்து வந்தார்.

இதனையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,'சட்டசபையில் அதிகபிரசிங்கித்தனமாக நடந்து கொண்ட வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து வேல்முருகனுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கலாய்க்கும் துரைமுருகன்… திமுகவுக்கு எதிராக வெடிக்கும் வேல்முருகன்: ஆட்டி வைக்கிறதா அதிமுக..?
இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ''கீழ்த்தரமான என்ற வார்த்தையை முதல்வர் பயன்படுத்தவில்லை. சேகர்பாபு பயன்படுத்தியதால் அதனை அப்படியே முதலில் பயன்படுத்தி உள்ளார். தாய்மொழி குறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் விவாதம் நடந்தது. அதில் எனது விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கேட்டேன். இந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது.

சபாநாயகர் முன்பு சென்று வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டேன். அதற்குள் சேகர்பாபு இது போன்ற வார்த்தைகளை பேசினார். அதிமுகவினர் எழுந்து வேல்முருகன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார்கள். தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்தவர்களை காவல்துறையில் நேரடி எஸ்.ஐ., பதவிக்கு எடுக்காத நிலை 10 ஆண்டுகள் இருந்தது.

பாதிக்கப்பட்ட போலீசார் என்னை சந்தித்து, எழுத்து தேர்வு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம் ஆனால் தமிழ் வழியில் படித்ததால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேரடி எஸ்.ஐ., பதவிக்கு எடுக்க மறுக்கிறார்கள் என தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் என் சொந்த செலவில் வழக்கு தொடர்ந்து பணியில் சேர்க்க உத்தரவு பெற்று தந்தது நான்.
அதிமுக ஆட்சியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது உண்மை. ஆனால் இதனை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சேகர்பாபு எதிர்க்கிறார். அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். இது விந்தையாக உள்ளது.

நான் மக்களின் குரலாக ஒலிப்பது சில அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் முதல்வரிடம் தவறாக சொல்கிறார்கள். ஆனால் தவறான தகவலை முதல்வரும் விசாரிக்கவில்லை. இதற்கு முன்னரும் சபைக்கு நடுவே நின்றுள்ளேன். அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டசபை மரபுக்கு மாறாகவும், சட்டத்துக்கு புறம்பாக எந்த கருத்தையும் சொல்லவில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். கொறடா உத்தரவு இருந்தாலும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சட்டரீதியாக எதிர்கொள்வேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகப்பிரசிங்கித் தனம்... வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!