தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும், சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,’’அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விளம்பர மோகம் கொண்ட வெற்று அறிவிப்புகள்.. எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட்.. வானதி விளாசல்..!

கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது ’’ என்று கூறியிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?

ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?