செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள பையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் வசந்த் (வயது 24). நாவலூர் பகுதியில் உள்ள மெரினா ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் பணி முடிந்து தனக்கு சொந்தமான KTM மோட்டார் சைக்கிளில் திருப்போரூர் புறவழிச்சாலை வழியாக பையனூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே, புறவழிச்சாலையில் சிறுநீர் கழிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வசந்த் நிற்பதை பார்த்து முன்னோக்கி சென்றுள்ளனர். விலை உயர்ந்த பைக்கில் தனிமையில் இருப்பதை அறிந்து திரும்பி வந்தனர்.

பின்னர் வசந்த்தை மிரட்டிய அந்த வாலிபர்கள், அவரை தாக்கி கிழே கிடந்த மது பாட்டிலை உடைத்து கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த வசந்திடம் இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ போன், 5 ஆயிரம் ரொக்கம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள KTM மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கேளம்பாக்கம் வழியாக தப்பி சென்றனர்.
ரத்த காயம் அடைந்த வசந்த், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த உடன் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். பின்னர் இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் உத்தரவின் பேரில் போலீசார் அங்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்ற நபர்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: மிதமிஞ்சிய மது போதை.. காருக்குள்ளே சமாதியான உடல்.. ஏசி போட்டு காரில் தூங்கியவர் கதி..!

பின்னர் திருப்போரூர் காவல்துறையினர் புறவழிச்சாலையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை உள்ள 140 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல் மூலம் அலைபேசி எண்களை கண்டறிந்தனர். இதில் படூர் பகுதியில் உள்ள தனியார் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் கொத்தனார் வேலை பார்த்து வந்த திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 24), பிரசாந்த் (வயது 22) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ. ஆசைத்தம்பி மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி கடலாடி சென்றனர்.

அங்கு பதுங்கி இருந்த ராம்குமார் (24), பிரசாந்த் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை பதுக்கி வைத்த இடத்தை காட்டுவதாக கூறி செய்யாறு ஆற்றோரம் போலீசாரை அழைத்துச் சென்றனர். அங்கு போலீசாரிடமிருந்து ராம்குமார் மட்டும் தப்ப முயன்று ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்தபோது அவனின் வலது கால் முறிந்தது.
இதை அடுத்து போலீசார் அவனை மீட்டு செங்கல்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ராம்குமாருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. இதையடுத்து திருப்போரூர் போலீசார் கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் திருடப்பட்ட ktm விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஆகியவற்றை யும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவர் மீதும் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மீது கடலாடி காவல் நிலையத்தில் 3 தகராறு, 1 கொலை முயற்சி, 2 திருட்டு வழக்குகளும், பிரசாந்த் மீது 2 தகராறு வழக்குகளும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இரண்டே நாளில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் தனிப்படையினருக்கு சிறப்பு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகணும்..! மதுபோதையில் முளைத்த நப்பாசை.. முதல் திருட்டிலேயே சிக்கிய நண்பர்கள்..!