கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் என தினமும் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஐபிஎல் போட்டிகள் துவக்கிய காலத்தில் இருந்தே ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடந்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரது நடவடிக்கைகள் இருப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர் .அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பேசி உள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது லேப்டாப்புகள் மற்றும் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர்கள் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வால் மாறிய போக்குவரத்து... வெளியான அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அவதி!!

பின்னர் போலீசார் அந்த அறையில் இருந்த 7 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல் ஜடேந்திரா, விபின் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம், 2 கார்கள், 2 பைக்குகள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். தினமும் நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி எவ்வளவு ரன் அடிக்கும், எந்த ஓவரில் எத்தனை சிக்சர் என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு பந்தயம் கட்டுவதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல்: மும்பையை திணறடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி..!