இமாச்சலப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டம் ஜத்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் திமான். இவர் சொந்தமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் மின் கட்டணமாக ரூ.2,500 செலுத்தக் கோரி மின்வாரியத்திடம் இருந்து ரசீது வந்தது.

ஆனால், கடந்த 2 மாதங்களுக்கு மின் கட்டணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் அவருக்கு ரூ. 2,10,42,08,405 செலுத்தக்கோரி மின் வாரியத்திடம் இருந்து ரசீது வந்தது கண்டு லலித் திமான் அதிர்ச்சி அடைந்தார். ஏறக்குறைய லலித் திமான் ரூ.210 கோடி மின் கட்டணம் செலுத்தக்கோரி ரசீது அனுப்பப்பட்டிருந்தது.
இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த லலித் திமான், மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த ரசீதைப் பார்த்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து, ஏதோ குளறுபடி நடந்துள்ளது, அது சரி செய்யப்படும் என்று லலித் திமானுக்கு உறுதியளித்தனர்.

இதையடுத்து, மின் கணக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்தபின், லலித் திமானுக்கு ரூ.4,407 மின்கட்டணம் வந்துள்ளதை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு குஜராத்தின் வால்சத் நகரில் அன்சாரி என்பவருக்கு சொந்தமான கடைக்கு மின் கட்டணமாக ரூ.86 லட்சம் செலுத்தக் கோரி ரசீது அனுப்பப்பட்டிருந்தது. அதன்பின் அலறியடித்துச் சென்ற வியாபாரி அன்சாரி, மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தன் கடையில் இருக்கும் மின் மீட்டரை ஆய்வு செய்யக் கூறினார். அதிகாரிகள் மின்மீட்டரை ஆய்வு செய்தபோது அதில் இரு தசம எண்கள் கூடுதலாக சேர்ந்துவிட்டதை உறுதி செய்து கோளாறை சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி, விவசாயிகள் அறிவிப்பு..
இதையும் படிங்க: கல்வி நிதியில் பிளாக்மெயில் செய்றாங்க ..மாநில பொறுப்பில் இருக்க அக்காவுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..!