முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீட்டை முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரீக் ஓ பிரையன், மக்களவையில், “மதரஸா மற்றும் வக்ஃபு கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது, கடந்த 4 ஆண்டுகளாக அவற்றுக்கு செலவிட்ட தொகை எவ்வளவு” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு எங்களைப்போல இடஒதுக்கீடு தரமுடியுமா? பாஜக-வுக்கு டி.கே.சி சவால்..!
இதற்கு பதில் அளித்த மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ “மதராஸாக்கள் மற்றும் சிறுபான்மை கல்விக்கான நிதி கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.174 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2024-25ம் ஆண்டில் அது ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியைத் தவிர்த்து ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
மத்திய சிறுபான்மை அமைச்சகம் சார்பில் 2 வக்ஃபு வாரிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குவாமி வக்ஃபு வாரிய தராக்கிதி திட்டம், ஷஹாரி வக்ஃபு சம்பத்தி விகாஸ் யோஜனா ஆகியவை மத்திய வக்ஃபு கவுன்சில் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய வக்ஃபு கவுன்சில் முழுமையாக அமைக்கப்படாத நிலையில், குறைவான செலவுகளே செய்யப்பட்டுள்ளன.

மதரஸாக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு கல்வி வழங்கும் எஸ்பிஇஎம்எம் திட்டம், கல்வித்துறையில் இருந்து சிறுபான்மை அமைச்சகத்துக்கு கடந்த 2021ல் மாற்றப்பட்டது. இந்தத் திட்டம் 2021-22ம் ஆண்டுவரை மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு ரூ.174 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ரூ.161.53 கோடி செலவிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து, 2022-23ல் நிதி ஒதுக்கீடு ரூ.30 கோடியாகக் குறைக்கப்பட்டு, 2023-24ம் ஆண்டில், ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டது .” எனத் தெரிவித்தார்.
இதேபோல குவாமி வக்ஃபு வாரிய தராக்கிதி திட்டம் (QWBTS) திட்டத்துக்கான நிதியும் கடந்த 2021-22ல் ரூ.10 கோடியாக இருந்தது, 2024-25ல் ரூ.3.06 கோடியாகக் குறைக்கப்பட்டது. 2021-22ல் ரூ.6.72 கோடி செலவிடப்பட்டது, 2024-25ல் ரூ.60 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது. ஷஹாரி வக்ஃபு சம்பத்தி விகாஸ் யோஜனா(SPEMM) திட்டத்துக்கான நிதியும் 2021ல் ரூ.5 கோடியாக இருந்தநிலையில் 2025ல் ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஷஹாரி வக்ஃபு சம்பத்தி விகாஸ் யோஜனா (SPEMM) என்றால் என்ன?
2014-15ம் ஆண்டு மோடி அரசால் அறிமுகப்பட்டது ஷஹாரி வக்ஃபு சம்பத்தி விகாஸ் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்கெனவே இருக்கும் கல்வித் திட்டங்களை மறுசீரமைப்பு செய்வதாகும். மதரஸாக்கள் மதரீதியான கல்வியைத்தான் வழங்குகின்றன, ஆனால், இந்தத் திட்டம் முஸ்லிம் மாணவர்களுக்கு நவீனக் கல்வியையும், ஆசிரியர் பயிற்சியையும், மதரஸாக்களை வலுப்படுத்தவும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும், முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
கல்வியறிவு குறைவு..!
முஸ்லிகளிடையே கல்வி விழிப்புணர்வு, கல்வியறிவு குறைந்து வரும் சூழலில் மத்திய அரசு கல்வித் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு கல்வியறிவு குறைந்து வருகிறது என்று மத்திய அரசுதான் கடந்த 10ம் தேதி, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. மத்திய சிறுபான்மை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “7 வயதுள்ள முஸ்லிம் குழந்தைகளில் கல்வியறவு வீதம் 79.5% ஆகவும், மற்ற மதத்தினர், சமூகத்தினரிடையே கல்வியறிவு வீதம் 80.90% இருக்கிறது. பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், முஸ்லிம்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய 6 சிறுபான்மை சமூகங்களின் நலன் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான கொள்கைகளும் வகுக்கப்பட இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

பிஎல்எப்எஸ் அறிக்கையின்படி, 2019 முதல் 2024 ஆண்டுகளுக்கு இடையே முஸ்லிம்களுக்கான கல்வியறிவு வீதம் சற்று அதிகரித்துள்ளது. 2019-20ல் 75.9% ஆக இருந்த கல்வியறவு வீதம் 2023-24ல் 79.5% ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தேசிய கல்வியறவு சராசரியைக் குறைவாகும். அனைத்திந்திய கல்வியறவு சராசரி 73 ஆக இருக்கும்போது, முஸ்லிம்களிடையே 68 ஆக இருக்கிறது.
முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்கள், கல்வியறவு, கல்விநிலை இந்த அளவு மோசமாகிவரும்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் மதரஸாக்களை இழுத்துமூடச் செய்யும் வேலைகள் நடக்கின்றன. குறிப்பாக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா ஆளும் அசாம் மாநிலத்தில் அரசு நிதியில் இயங்கும் அனைத்து மதரஸாக்களையும் மூட உத்தரவிட்டு அதை பொதுப்பள்ளியாக மாற்ற உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முஸ்லீம்கள் 'எச்சச்சோறு...' தரக்குறைவாகப்பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி: ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள்..!