டெல்லியில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக பூஜ்ஜியத்தைப் பெற்றுள்ளது. பத்லி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப சுற்றுகளில் முன்னிலை வகித்த கட்சி, இப்போது அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது.
2013 வரை 15 ஆண்டுகள் தேசிய தலைநகரை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை இன்று டெல்லி மக்கள் முற்றிலுமாக துடைத்து எறிந்து விட்டார்கள். டெல்லியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காணாமல் போய் விட்டது. முழுப் போட்டியும் ஆம் ஆத்மி கட்சி- பாஜகவுக்கு மட்டுமே.

இதுவரையிலான நிலவரப்படி டெல்லியில் உள்ள 70 இடங்களில் ஒரு தொகுதிகளில் கூட காங்கிரஸ் முன்னிலையில் இல்லை.வாக்கு சதவீதத்தின்படியும் காங்கிரஸ் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. காங்கிரஸ் 6.86 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 69 இடங்களில் பாஜக 41 இடங்களிலும், ஆம் ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த முறையும் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றால், டெல்லியால் காங்கிரஸ் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது இருக்கும்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் கட்சியை முடித்து விடுங்கள்..' டெல்லி தோல்வியால் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆவேசம்..!
கடந்த 2020-ல் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் மோசமான நிலையில் இருந்தது. அந்தக் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அப்போது வாக்கு சதவீதமும் 4.26 சதவீதமே. 2015 ஆம் ஆண்டிலும் கூட, காங்கிரஸ் 70 இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. அப்போது வாக்கு சதவிகிதம் 9.7 சதவீதமாக இருந்தது.

2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் அதிகம் பாதித்தது காங்கிரஸ் கட்சிதான். இந்தத் தேர்தலுக்கு முன்பு, 1998 முதல் டெல்லியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு பொதுமக்கள் தங்கள் புதிய தலைவராக கெஜ்ரிவாலை தேர்ந்தெடுத்தனர். ஒரு புதிய கட்சி அதிசயங்களைச் செய்தது. 2008 தேர்தலில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை அமைத்த காங்கிரஸ், 2013ல் 25 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து வெறும் 8 ஆகக் குறைந்துவிட்டன. அதன் பிறகு, அந்தக் கட்சிக்கு ஒரு இடத்தைப் பிடிப்பது கூட கடினமாகிவிட்டது.
மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட்டது. அந்தக் கட்சி பாஜகவுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தது. இருப்பினும், டெல்லியில் உள்ள ஏழு இடங்களையும் பாஜக வென்றது. ஆனால் 18 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. டெல்லி மக்கள் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மீது நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தமா..? ஹெச். ராஜாவின் பேச்சால் அதிரடியாக முடிவெடுத்த கதர்சட்டைகள்!