விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் தர்மா ரெக்ரேஷன் கிளப் என்ற தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இந்த பார் குடியிருப்புகளின் மத்தியில், மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே சாய்பாபா கோயில் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ளது.
இங்கு மது அருந்துபவர்கள் தினந்தோறும் அதிக போதையில் சாலையில் அங்கும் இங்கும் அலை மோதுவதும், அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சாய்பாபா கோவில் செல்லும் வழியே உள்ள இந்த மதுபான கடை காரணமாக பக்தர்கள் முகசுழிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இந்த தனியார் மதுபான பாரில் நாள்தோறும் ஒவ்வொரு பிரச்சனைகள் ஏற்பட்டு தினம் தோறும் அடிதடி நடந்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் இந்த தனியார் மதுபான பாரில் மது அருந்த வந்த பந்தல்குடியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பீருக்கு இலவசமாக வழங்கும் சைடிஸ் கேட்டு உள்ளனர். அதற்கு சைடிஸ் எல்லாம் தர முடியாது என பார் ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. அதற்கும் சேர்த்து தானே பீரில் காசு வாங்குகிறீர்கள் என இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பார் உரிமையாளர் தரப்பினர், பாரில் பணிபுரியும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த இளைஞர்களை ரூமில் பூட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனை அடுத்து அந்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவோட அரசியல் நாடகத்தை இனி நம்ப மாட்டாங்க.. லெப்ட் ரைட் வாங்கிய அண்ணாமலை..!

நண்பர்களின் கூக்குரலை அடுத்து அங்கு விரைந்து வந்த அந்த இளைஞர்களின் நண்பர்கள், பார் கதவைத் தட்டி அந்த இளைஞர்களைக் கேட்டுள்ளனர். ஆனால் அப்படி யாரும் இல்லை என ஊழியர்கள் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களின் நண்பர்கள் பார் கதவை உடைத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அங்கு நகர் போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் பாருக்குள் நுழைந்து ரூமில் பூட்டி வைத்திருந்த அந்த இளைஞர்களை மீட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாரில் இருந்தா சேர்கள் அடித்து உடைக்கப்பட்டன. பார் முழுவதும் ரத்தம் களறியானது. காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் இந்த தனியார் பாரில் அடிக்கடி இது போன்று அசம்பாவிதங்கள் நடப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில் ரெக்ரேஷன் கிளப்புகள் என்ற பெயரில் செயல்படும் தனியார் பார்கள் தங்களது கிளப் நண்பர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய மது பாட்டில்களை பொது மக்களுக்கும் விற்பனை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளனர்.
இந்த குறிப்பிட்ட பாரில் மது அருந்த வருவார்கள் ஏதேனும் பிரச்சனை செய்தால் அவர்களை குண்டர்களை வைத்து தாக்குவது தொடர்கதை ஆகி வருகிறது. இதுபோன்று அரசு விதிகளை மீறி செயல்படும் தனியார் மதுபான பார்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு..! மஞ்சள் காய்ச்சாலுக்கு 34 பேர் பலி..!