ஆடியோ வெளியான விவகாரத்தில் டக்கென விஜய் கடும் வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாடுகளால் கட்சிக்குள் ஒரு பெரிய மாற்றம் வந்தது. கட்சி அணிகள் அமைக்கப்பட்டு முறையாக அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கியது. விஜய் தன் கட்சி கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அறிவித்தார். தொடர்ந்து அக்டோபர் 27 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் விஜய் பேசிய பேச்சுகளும், அவரது அறிவிப்புகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் தவெகவில் அடுத்த கட்ட செயல்பாடுகள் பெரிதாக இல்லாத நிலையில் வெறும் அறிக்கை மட்டுமே விஜய் விட்டு வந்தார். இது எதிர்க்கட்சிகளால், குறிப்பாக ஆளுங்கட்சியின் சமூக ஊடகங்களால் கிண்டல் அடிக்கப்பட்டது. ’பனையூர் அரசியல்’ என்றெல்லாம் கிண்டல் அடிக்கப்பட்டது. முக்கியமான விஷயங்களில் லேட்டாக அறிக்கைகள் வருவதும், கட்சி அணிகளை அமைப்பதிலும், கட்சி நிர்வாகிகளை நியமிப்பதிலும் பெரிய அளவில் இழுபறி இருந்தது. இது கட்சி தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீ இப்படியே போனால் கட்சி நிலைக்காது...விஜய்யை கண்டித்த எஸ்.ஏ.சி?
அக் 27 மாநாடு, புத்தக வெளியீட்டு விழாவுக்கு பின் விஜய் எந்த பொது நிகழ்ச்சிகளும் பங்கேற்காததும், முக்கியமான பிரச்சினைகளில் கருத்து தெரிவிப்பதையும் கட்சியின் தலைவர் விஜய் தவிர்த்து வருவதும், மற்ற தலைவர்களும் ஊடகவியலாளர்களை சந்திக்காமல் ஒதுங்கி ஓடுவதும், முக்கியமான பிரச்சினைகளில் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது, போராட்டம் நடத்துவது போன்ற ஒரு அரசியல் கட்சிக்குரிய எந்த தன்மையும் இல்லாமல் என்.ஜி.ஓ இயக்கம் போல் கட்சியை நடத்துவதாக கட்சிக்குள் விமர்சனம் இருந்தது. கட்சி ஆரம்பித்து அதன் செயல்பாடு நடைமுறைக்கு வருவதற்குள்ளாகவே புஸ்ஸி ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும் ஒரு கோஷ்டியாகவும் மற்றவர்கள் தனி அணியாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் புஸ்ஸி ஆனந்தை சுற்றியே இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
வெளி நபர்கள் யாரும் விஜய்யை சந்திப்பதற்கும், மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைய வருபவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தாவேக விஜய்யை சுற்றி இரும்பு கோட்டையை புஸ்ஸி ஆனந்த் கட்டி கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கட்சிக்குள் முணுமுணுப்புகள் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென ஒரு ஆடியோ வெளியானது. கட்சியின் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் அவர் முழுவதும் புஸ்ஸி ஆனந்தை குற்றம் சாட்டி இருந்தார். வெளியில் கட்சி குறித்து என்னென்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டதோ அவையெல்லாம் உண்மை என்கிற ரீதியில் அவரது அந்த ஆடியோ இருந்தது. ஆடியோவில் உண்மை தன்மையை சோதிப்பதை விட ஆடியோவில் உள்ள விஷயம் சரியானது என்று பலரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இந்த விவகாரம் உடனடியாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் காதுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் விஜய்யை போனில் அழைத்து ”நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் நீ கேட்கவில்லை” என்று அவர் தனது சொன்னதாக கூறப்படுகிறது.
ஆடியோ வெளியான விவகாரத்தில் விஜய் கடும் மனவருத்தம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆடியோ குறித்தும் அதில் உள்ள விஷயங்களை கேட்டுக் கொண்ட விஜய் புஸ்ஸி ஆனந்தை அழைத்து பல்வேறு விஷயங்களை கேட்டு உள்ளார். அதில் நான் வைத்துள்ள நம்பிக்கைக்கு நீங்கள் இப்படி நடந்து கொண்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று தன் கோபத்தை விஜய் பதிவு செய்துள்ளார். பண விவகாரங்களில் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் விஜய்யின் காதுக்கு நேரடியாக மற்ற நிர்வாகிகளால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதையும் கேட்டுக் கொண்ட விஜய் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துள்ளார்.
கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சிலருக்கு கட்சியிலிருந்து மாதம் தோறும் செல்லும் உதவித்தொகையும் ஜான் ஆரோக்கியசாமி மூலமாக செல்லவில்லை என்பதையும் விஜய் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் முக்கியமான ஒருவர் புஸ்ஸி ஆனந்துடன் கைகோர்த்து கொண்டு வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி நியமனத்தில் பணம் பார்த்ததாக ஒரு தகவலும் விஜய்யிடம் கொண்டு செல்லப்பட்டது. அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்ட அவர் இது குறித்து புஸ்ஸி ஆனந்திடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லையாம். தனது தந்நிலை விளக்கத்தை சொல்லப்போன புஸ்ஸி ஆனந்தை புறக்கணித்த விஜய் உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். நமது கட்சியில் ஆலோசர்களாக இணையவிருந்த பழ.கருப்பையா, கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜெயந்தி நடராஜன் நிலை என்ன? ஏன் இன்னும் அவர்கள் விவகாரத்தில் ஒரு முடிவு வரவில்லை? ஆதவ் அர்ஜுன் பற்றி சொல்லியிருந்தேனே என்ன செய்தீர்கள்? நாம் தமிழர் கட்சியின் அந்த முக்கிய பெண் பிரமுகர் கட்சியில் இணைவதாக கேட்டிருந்தாரே அது என்ன ஆச்சு? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஐந்து பேர் விவகாரத்தில் ஏன் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, என்னிடம் இதுகுறித்து அப்டேட் சொல்ல சொல்லியும் ஏன் மெத்தனம்? எதுவுமே செய்யாமல் என்ன செய்கிறீர்கள்? எது தடையாக இருக்கிறது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினாராம்.

இதனால் முகம் வாடிய நிலையில் புஸ்ஸி ஆனந்த நின்றுள்ளார். புஸ்ஸி ஆனந்துடன் தொடர்புடைய அந்த செய்தி தொடர்பாளர் மீதும் விரைவில் நடவடிக்கை வரும் என்று தெரிகிறது. இதே போல் கட்சியின் உள் விவகாரத்தை வெளியில் வர காரணமாக ஆடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட வைத்ததும் ஜான் ஆரோக்கியசாமியின் வேலைதான் என்பதும் விஜய்யிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் ஜான் ஆரோக்கியசாமி மீதும் விஜய் கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தன்னுடைய விளக்கத்தை ஜான் ஆரோக்கியசாமி சொல்ல முயன்றதாகவும் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்து சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் விஜய் நேரடியாக தலையிட ஆரம்பித்து விட்டார் என்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக தலையிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். விஜய் கேட்டது போலவே அரசியல் ஆலோசர்கள் மூவர் மற்றும் ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் இணைவது என்ன ஆயிற்று என்று எஸ்.ஏ.சி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தை உடனடியாக கண்காணிக்க வேண்டும் இல்லாவிட்டால் கட்சிக்குத்தான் சிக்கல் , நான் நேரடியாக வருகிறேன் என்றும் எஸ்.ஏ.சி. கூறியதாகவும் அவருக்கு காய்ச்சல் என்பதால் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை ஓரிரு நாளில் அவரும் வந்து ஆலோசனை ஈடுபடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மொத்தத்தில் இந்த விவகாரத்தை விஜய் கையில் எடுத்து விட்டார். புஸ்ஸி ஆனந்தின் தனிப்பட்ட செயல்பாடுகளால் கட்சி பாதிக்கப்படுவதை எப்படி கொண்டு செல்வது என்று தயங்கிக்கொண்டிருந்த நிர்வாகிகள் மத்தியில் ஆடியோ வெளியானது பிரச்சனையின் தீவிரத்தை நேரடியாக விஜய்யிடம் கொண்டு சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஒருவர் கையில் கட்சி இருக்கக்கூடாது என்பதற்கு ஆடியோ முடிவு கட்டி விட்டதாக தொண்டர்கள் கருதுகின்றனர். அதே நேரம் கட்சியின் வியூக வகுப்பாளர் அவரது வேலையை செய்யாமல் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஜய் கருதுகிறார். அதனால் விரைவில் அவர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கு குழி பறிக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்? வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி ஆடியோ உண்மையா? என்ன நடக்கிறது தவெகவுக்குள்?