அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றன திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள். இக்கூட்டனியைத் தமிழக மக்கள் 2026ஆம் ஆண்டு தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிப்பார்கள். திமுக கூட்டணி இந்துக்களுக்கு விரோதமான தீய சக்தி. இதை தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள்.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த அனைவரும் முழு இந்து விரோத தீய சக்திகள். தமிழகத்தில் பல இந்துக் கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை வக்பு வாரிய சொத்துகள் என அபகரித்துள்ளனர். இதை ஒவ்வொரு இந்து மக்களும் புரிந்துள்ளனர். 1995-இல் வக்பு வாரிய சட்டம் வந்தபோது வக்பு வாரியத்துக்கு சொந்தமாக இருந்த நிலம் 8 லட்சம் ஏக்கர். ஆனால், தற்போது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. இந்துக்களின் சொத்துகளை, இந்து கோயில்களின் சொத்துக்களை அபகரிக்க ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது?

இந்து கோயில்களுக்கு அறநிலையத் துறையில் இருந்து மின் கட்டணம் செலுத்தாமல் கோயில் உண்டியலில் இருந்து மின் கட்டணம் செலுத்த யார் அனுமதி வழங்கியது? இது இந்து கோயில்களின் மீதான கொள்ளை தானே? நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கச்சத்தீவை தாரை வார்க்கும்போது கருணாநிதி போராடி இருக்க வேண்டுமா, வேண்டாமா? தமிழ் உணர்வு கருணாநிதிக்கோ திமுகவுக்கோ இருக்கிறதா? தமிழ் மண்ணை தாரை வார்த்ததற்கு எதிராகப் போராடியது ஜன சங்கமும், பாரதிய ஜனதா கட்சியும்தான். ஆனால், நாங்கள் தமிழ் விரோத கட்சியென்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: மசோதா நிறைவேற்றம் திருப்புமுனை: இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்க முடியும்… மோடி பெருமிதம்..!

இந்து கோயில்களின் சொத்துகளைச் சுரண்டுகிற கொள்ளைக்கார கூட்டம் திமுக. அதனால்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முழுமையாக திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். கச்சதீவை தாரை வார்க்கும்போது பாஜக போராடியது. திமுக ஏன் போராடவில்லை என்பதை ஊர் ஊராக சொல்ல வேண்டும். எனவே, இவர்கள் தமிழ் சமுதாயத்தை வஞ்சிக்கிற ஒரு கூட்டம் என்று தெளிவாக தெரிகிறது. இவர்களின் தோல்வி தமிழ் சமுதாயத்தின் விடியலாக இருக்கும்.

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவாரா, தொடர்வாரா என்பது அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். எனக்கு வழங்கப்பட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். பாஜக தலைமையிலான கூட்டணி 2026 தேர்தல் வெற்றி பெற்றால் யார் தலைமையில் ஆட்சி என்பதை பாஜகவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்யும். இதில், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி ஆட்சிதான் வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

விஜய்யின் வீட்டை வக்பு வாரியம் கேட்டிருந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுவாரா? சட்டத்தைப் பற்றி தெரியாத, மக்கள் பிரச்சினை பற்றி தெரியாத ஒரு நடிகர் இதில் நாடகம் ஆடுகிறார். வெறும் சினிமாவில் நடிப்பதும் காசு சம்பாதிப்பதும் ஒரு தொழிலாக கொண்ட விஜய், மிகப் பெரிய இந்து விரோத தீய சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வழக்குகள் உள்ளன. அவர் சிறைக்குச் செல்கிற நாள்தான் இந்துக்களுக்கான வெற்றி. உதயநிதி இந்து விரோத தீய சக்தி. இந்து விரோத கோமாளி ஆ.ராசா. இவர்கள் இருவரையும் சிறையில் அடைகிற காலம் வரும்” என்று ஹெச்.ராஜா கூறினார்.
இதையும் படிங்க: பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மனம் குளிர வரவேற்கும் டாக்டர் ராமதாஸ்!!