தவெக ஆரம்பித்தபின் மூன்று மாதங்களாக நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் எந்தவித செயல்பாடும் இன்றி கோஷ்டி பூசலால் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் களத்தில் குதித்த விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை காண நேரடியாக சென்றார். அதன் பின்னர் கட்சியின் உள்ள விவகாரங்கள் குறித்து அக்கறை எடுத்துக் கொண்ட விஜய் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்த பொறுப்பை புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் ஒப்படைத்து இருந்தார். இதில் பட்டியல் இறுதியான நிலையில் அவர்களை நேர்காணல் செய்ய விஜய் முடிவு செய்திருந்தார். மொத்தம் நான்கு நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த நேர்காணலில் முதல் நாளான நேற்று விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்தார்.
நேர்காணல் ஆரம்பிக்கும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் அரங்கத்திற்குள் சென்றனர். நேர்காணல் ஆரம்பிக்கும் போது நிர்வாகிகள் என்ன செய்யப் போகிறார்கள்? என்ன சொல்ல போகிறார்கள்? என்று ஆவலுடன் புஸ்ஸி ஆனந்த் காத்திருக்கையில், விஜய் திடீரென, புஸ்ஸி சற்று வெளியே நில்லுங்கள் என்று அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்க வேண்டும் என்ற முடிவெடுத்த விஜய் அவரை வெளியே அனுப்பி உள்ளார். உடன் பொருளாளர் வெங்கட்ராமனும் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத புஸ்ஸி முகம் வெளிறிப்போய் வெளியே வந்துள்ளார். அதன்பின்னர் நிர்வாகிகளிடம் விஜய் பேசியது குறித்து நமக்கு கிடைத்த தகவல்கள் வருமாறு...
இதையும் படிங்க: அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!
ஒவ்வொரு நிர்வாகியாக விஜய் அழைத்துள்ளார், அவர்களிடம் சில கேள்விகளை விஜய் வைத்துள்ளார். நீங்கள் மாவட்ட செயலாளருக்கு தகுதியானவரா? தகுதியானவர் என்றால் அதற்கு உரிய காரணங்களை சொல்லுங்கள். உங்கள் மாவட்டத்தில் நீங்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்வீர்கள்? கட்சி உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? உங்களிடம் வேறு ஏதாவது சொல்ல வேண்டியது இருந்தால் அதை தயங்காமல் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு பெரும்பாலானவர்கள் தாங்கள் மாவட்ட செயலாளராக எப்படி செயல்படுவோம் என்று கூறியுள்ளனர். அவர்கள் பேசியபோது இடையிடையே சில சந்தேகங்களையும் அவர்களை முகத்துக்கு நேராக உற்று நோக்கியபடி விஜய் கேட்டுள்ளார். சில நிர்வாகிகள் கட்சி தங்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் உடனடியாக செய்ய முடியாது என்று விஜய் நேரடியாகவே சொல்லிவிட்டார்.
மூன்றாவதாக சிலர் முந்திரிக்கொட்டைத்தனமாக கட்சி கூட்டணி வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறிய பொழுது கூட்டணி பற்றி என்னிடமே சொல்கிறீர்களா அதை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கட்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் மாவட்டத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? கட்சிக்கு உங்களுடைய ஆலோசனை என்ன? என்னிடம் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்ன அதைப் பற்றி மட்டும் சொல்லுங்கள் என்று பேசியுள்ளார் விஜய்.
நேருக்கு நேர் விஜய் தனியாக உட்கார்ந்து கேள்வி கேட்டதால் பல நிர்வாகிகளுக்கு தான் பேச வேண்டியது மறந்து பதற்றத்தில் பேசியுள்ளனர். இன்னும் சிலர் அடுத்த வாய்ப்பு கிடைத்திருந்தால் முழுமையாக பேசி இருப்பேன் என்றெல்லாம் கூட வெளியில் வந்து புலம்பியுள்ளனர். சில நிர்வாகிகள் பேசும் பொழுது கட்சி இன்று இருக்கும் நிலையை பற்றி ஓரளவு கூறி உள்ளனர். வெளியில் கட்சி செயல்படவே இல்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது, நாங்களும் ஏதாவது பிரச்சனை என்றால் மேலிடத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை, கட்சிக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று புஸ்ஸி ஆனந்தினுடைய நடவடிக்கைகளை குறைகளாக பட்டியலிட்டு கூறியுள்ளனர். அவரால் நாங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம், அவரை மீறி எதுவும் செய்ய முடியவில்லை, கட்சி தலைவரை சந்திக்க கூட அனுமதிக்க மறுக்கிறார், கட்சிக்குள் பல குழப்பங்களுக்கு அவர்தான் காரணம் என்று பேசியுள்ளனர்.

தனக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக போடுகிறார், கட்சியில் பணம் உள்ளவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது, தகுதியானவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஜான் ஆரோக்கியசாமி பற்றியும் குறை கூறியுள்ளனர். அவரது ஆடியோ பேச்சால் கட்சிக்கு ஊருக்குள் மரியாதை குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். சிலர் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் போன் செய்தால் செல்போனை எடுப்பதில்லை, கட்சியோடு இணைந்து செயல்படுவதில்லை, அவருக்கும் கட்சிக்கும் இடைவெளி உள்ளது போல் தெரிகிறது என்று குறை கூறியுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் அனைத்து நிர்வாகிகளும் புஸ்ஸி ஆனந்த் பற்றியும் ஜான் ஆரோக்கியசாமி பற்றியே பெரிய புகார் பட்டியலை கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் திடீரென விஜய் அழைத்து குறைகளை கேட்டதால் பல நிர்வாகிகள் தங்களால் பதற்றத்தில் எதுவும் சொல்ல முடியவில்லை, இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று தெளிவாக சொல்லிவிடுவோம் என்றெல்லாம் கூறியுள்ளனர். சில நிர்வாகிகள் கட்சி உள் விவகாரங்கள் குறித்து கட்சியில் நடப்பது குறித்து தலைமைக்கு தெரியப்படுத்த எந்த வழியும் இல்லை தினசரி வந்து செல்ல கட்சியின் அலுவலகம் சாதாரணமாக இயங்க வேண்டும் ஆனால் இங்கே அப்படிப்பட்ட வாய்ப்பே இல்லை என்றும், கட்சியின் மாநில நிர்வாகிகள் யார் என்று பார்த்தால் யாருமே இல்லை புஸ்ஸி ஆனந்த் மட்டுமே கட்சியின் மொத்த முகமாக தெரிகிறார், புகாரே புஸ்ஸி ஆனந்த் பற்றியது என்றால் அவரிடம் எப்படி போய் சொல்ல முடியும் என்றெல்லாம் பேசி உள்ளனர். இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று புலம்பியுள்ளனர்.

சிலர், அன்றாட அரசியலை நாம் பத்திரிக்கைகளில் மற்ற கட்சி தலைவர்கள் போல் பேட்டி கொடுக்க வேண்டும், புஸ்ஸி செய்தியாளர்களை பார்த்தாலே ஓடுகிறார் என்று கூறியுள்ளனர். ஒரு சிலர் கட்சியின் செயல்பாடு என்று மாவட்டத்தில் ஒன்றும் இல்லை மன்றத்தில் செயல்பாடும் கட்சி செயல்பாடும் வேறு வேறு கட்சி என்றால் அது வேறு மாதிரி செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர்.
இன்னும் சிலர் கட்சிக்கு வெளியில் இருந்து வருவதற்கு பலரும் எங்களிடம் கேட்கிறார்கள் அது குறித்து என்ன சொன்னாலும் கட்சி தலைமை கண்டு கொள்வதே இல்லை, பலரும் காத்துக் கிடக்கின்றனர் என்று வருத்தத்துடன் பகிர்ந்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட விஜய் உரிய நேரத்தில் உரிய முடிவெடுப்பேன். நீங்கள் உங்கள் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுங்கள் இனிமேல் கட்சியின் விவகாரம் குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்த அதற்குரிய வழியை கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று நம்பிக்கையூட்டி அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்; முழு அரசியல்வாதியாக மாறிய விஜய் - 120 மாவட்ட செயலாளர்களுக்கு நேருக்கு நேர் போட்ட கன்டிஷன்!