சென்னை மணப்பாக்கத்தில் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மொழியை வைத்து மக்களைப் பிரிக்க வேண்டும் என பாஜக எப்போதும் நினைத்தது கிடையாது. இன்னொரு மொழியை எப்போதும் இணைப்பு மொழியாகத்தான் பயன்படுத்த வேண்டும். பிரிக்கும் மொழியாக பயன்படுத்த கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் பிரித்தாளும் வகையில் உகாதி வாழ்த்து கூறுகிறார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வர் கைவிட வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திமுக ஆதரவுடன் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனுக்காக நான் என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு சுமூகமான நடைமுறைக்கு திமுக அரசு வர வேண்டும். 2026இல் திமுக கூட்டணி பிரிந்துவிடும்.
இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!

செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் எதுகை மோனையில் பேசுவது அவருக்கு சரியாக இருக்கலாம். ஆனால், தவெக எதிரில் கூட இல்லை. முதலில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும். விஜய் நடித்த படம் மற்ற மொழிகளிலும்தான் ஓடுகிறது. படத்துக்கு பல மொழி வேண்டும். ஆனால், பாடத்துக்கு பல மொழி வேண்டாம் என அவர் சொல்வது எப்படி நியாயம்?

திமுக எதை செய்கிறதோ அதையேதான் விஜய்யும் செய்கிறார். கொள்கை தலைவர்களாக அஞ்சலை அம்மாள், காமராஜர் உள்ளிட்டோர் இருக்கும்போது பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என விஜய் சொல்கிறார். எனில், திமுகவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. திமுகவின் ‘பி டீமாக’ தான் தவெக உள்ளது. தெளிவற்ற தன்மையில் விஜய் இருக்கிறார். இன்னும் அழுத்தமாகவும், ஆழமாகவும் தமிழக அரசியலை கற்றுக் கொண்டு விஜய் பேச வேண்டும்" என்று தமிழிசை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமஜெயம் கொ**யிலேயே துப்பு துலக்க முடியல.. இதுல பாமர மக்களுக்கு பாதுகாப்பாம்.. சிதறவிடும் சீமான்