மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கடுமையான விவாதங்கள் நடந்துள்ளது. தன் மீதான விவாதங்களுக்கு, விமர்சனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் கையறு நிலையில் முந்தைய மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தன்னுடைய இயலாமையை ஒப்புக்கொண்டது தோழர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென, திமுகவை கடுமையாக விமர்சித்ததும் மாநாட்டில் பேசும் பொழுது போராட்டங்கள், ஊர்வலமாக செல்லஅனுமதி கொடுக்காமல் வழக்கு போடுவது, கைது செய்வது என தமிழகத்தில் ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா? என்று முதல்வரின் காவல்துறையை நேரடியாக கே பாலகிருஷ்ணன் அட்டாக் செய்தது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக முரசொலி உள்ளிட்ட திமுக நாளேடுகளில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் மாநாட்டில் தனக்கு எதிராக நடத்தப்படும் விவாதத்தை மட்டுப்படுத்த பாலகிருஷ்ணன் இதுபோன்று அதிரடி பேச்சுகளை கடைசி காலத்தில் பேசினாரா? என்ற வாதமும் மறுப்பதற்கு இல்லை.

மாநாட்டில் பிரதான பேச பொருளாக பிரதிநிதிகளால் வைக்கப்பட்டது திமுக கூட்டணியில் இன்னமும் நாம் இப்படித்தான் நிற்க வேண்டுமா? நமக்கென்று சுயமரியாதை உள்ளது. சாம்சங் போராட்டத்தில் நம்முடைய பந்தலை எல்லாம் பிரித்துப் போட்ட காவல்துறையை வைத்துள்ள முதல்வரை நேரில் சந்தித்து நன்றி வேறு சொல்ல வேண்டுமா? நமது அறிக்கையில் அவருக்கு எப்படி நன்றி சொல்லலாம்? என்றெல்லாம் கேள்விகள் பரபரப்பாக இருந்தது. இன்னொரு விதத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கு முக்கிய காரணம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கட்சியின் செயல்பாடுகளில் போராட்டத் தன்மை முற்றிலும் இல்லை. ஆளுகின்ற அரசுக்கு ஒத்து ஊதுவதாக கட்சி அமைந்துள்ளது என்ற கோபமும் பிரதிநிதிகளிடையே வெளிப்பட்டது. திமுகவின் அழுத்தத்திற்கு சி.பி.எம் தலைமை கட்டுப்பட்டு தொழிற்சங்க தலைவர்களை போராடக்கூடாது என்று எப்படி நிர்பந்திக்கலாம்? என்ற கேள்வியும் மாநாட்டில் எழுந்தது.
இதையும் படிங்க: விழுப்புரம் சிறுமி உயிரிழப்பு...நிவாரணத்தை நிராகரித்த பெற்றோர் ..கை பிடித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பொன்முடி..!
போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் முதல் சாம்சங் போராட்டம் வரை போராட்டத்தை நீர்த்து போக செய்யும் வேலையையும், அரசுக்கு ஆதரவாக தொழிற்சங்க தலைவர்கள் போராட்ட குணத்தை அவர்களது செயல்பாடுகளை கட்சி தலைமை முடக்கியது என்ற கோபமும் பிரதிநிதிகளின் வாதத்தில் வெளிப்பட்டது. சிஐடியூ தொழிற்சங்கத்தை கட்சி எப்படி கட்டுப்படுத்தலாம், இனி எங்களை கட்டுப்படுத்தாதீர்கள். எங்களை சுயமாக இயங்க விடுங்கள் என்று மாநாட்டில் சிஐடியு சார்ந்த பிரதிநிதிகள் கோபாவேசமாக பேசியதை பார்க்க முடிந்தது, ”கரப்ஷன் கமிஷன் கலெக்சன்” என்று அதிமுக அரசை கண்டித்து ஆட்சிக்கு வந்த திமுக அதே பாலிசியில் செல்லும் பொழுது நாம் அதற்கு எப்படி சப்பை கட்டு கட்டலாம்? இன்று வரை சப்பை கட்டு கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று பிரதிநிதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
வழக்கமாக சட்டமன்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாதம் செய்து வாங்கும் நாம் இந்த முறை ஆறு தொகுதிகளை ஏன் ஒப்புக்கொண்டோம்? நாம் அதற்கு பதில் தனித்து நின்று இருக்கலாம், இந்த முறை இரண்டு இலக்க அளவில் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும், அல்லது தனித்து மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும் என்று பிரதிநிதிகள் பேசினார். அதேபோல் நம்முடைய அடிப்படை கொள்கை தொகுதி உடன்பாடு அடிப்படையில் இயங்குவது தான், தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நல பிரச்சனையில் போராட்டங்களை முன்னெடுத்து நடந்திருக்க வேண்டும். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் கூட்டணி கட்சியாக நாம் எப்படி இயங்கலாம் என்று பிரதிநிதிகள் ஆவேசமாக தலைமைக்கு கேள்வி எழுப்பினார்.

முதல்வர் பர்த்டேவில் கலந்து கொண்டு பாராட்டுவதெல்லாம் எந்த வகை என்றும் கேள்வியை பிரதிநிதிகள் வைத்தனர். பாஜக வளர்ந்திருக்கிறது என்று கூறும் நாம். நாம் ஏன் வளரவில்லை என்பதை பற்றி கொஞ்சமாவது யோசித்தோமா? மிதவாத தலைவர்களால் இந்த போக்கு நடந்தது, தொடர்ந்து ஆளுகின்ற அரசை நாம் ஆதரித்து நடந்ததால் நமக்கு இந்த நிலை. இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கிறது என்று கோபாவேசத்துடன் பிரதிநிதிகள் தலைமையை நோக்கி கேள்வி வைத்தனர்.
இதற்குப் பின்னர் பதில் அளித்து பேசிய கே. பாலகிருஷ்ணன் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் விதமாக சில கருத்துக்களை வைத்து ஒப்புக்கொண்டார். சாம்சங் போராட்டத்தில் முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அறிவாலயத்திலிருந்து எங்களை அழைத்த பொழுது வேறு வழியில்லாமல் சென்றோம் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். முதல்வர் நிகழ்வில் கலந்து கொண்டது குறித்தும் இதேபோன்று ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுத்தார். .தமிழக அரசுக்கு எதிராக நாம் இயங்கினால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பழைய பாட்டையே மீண்டும் கே பாலகிருஷ்ணன் பாடினார். ஆனால் கட்சிக்கு உள்ளேயே கே.பாலகிருஷ்ணனுக்கு பலத்த எதிர்ப்பு இருந்ததை காண முடிந்தது. கே. பாலகிருஷ்ணன் மீண்டும் செயலாளராக வருவதற்கு கட்சியின் மாநில குழுவும், மேல் கமிட்டிகளும் ஒப்புக் கொள்ளாத நிலையில் புதிய மாநில செயலாளரை போர்க்குணம் உள்ள ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் மாணவர் சங்கம் விவசாய சங்கம் என பல்வேறு போராட்ட களத்தில் வந்த பெ. சண்முகம் புதிய மாநில செயலாளராக முன்வைக்கப்பட்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டதை ஏற்க முடியாத மூத்த உறுப்பினர்கள் ஜி. ராமகிருஷ்ணன், கே. பாலகிருஷ்ணன், பி.சம்பத், செல்வசிங், லாசர், நூர்முகமது போன்றோர் வயதை காரணம் காட்டி மாநில குழுவில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக மாநாடு சேர்த்துக் கொண்டதை அவர்கள் மறுக்கவில்லை. அதே நேரம் இவர்களில் சிலர் மத்திய கமிட்டி உறுப்பினராக நீடிப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் குறிப்பிடுகின்றனர். சண்முகம் போராட்ட குணம் உள்ள ஒரு தலைவர் என்பதால் அவரை தங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், இந்த தேர்வில் அதிருப்தி உள்ளதாலும் முன்னே எப்போதும் இல்லாத அளவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக மாநில குழுவில் இருந்து விலகுவது இம்முறையில் தோழர்களால் கவலையுடன் பார்க்கப்படுகிறது. அதே போன்று மாநில குழு உறுப்பினர் பாக்கியம் பலமுறை நிதி ஒழுங்கீனம் காரணமாக பதவி இரக்கம் செய்யப்பட்டவர், இம்முறையும் நிதி ஒழுங்கீனம் காரணமாக மாநில குழுவில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சண்முகம் தாம் தேர்வு செய்யப்பட்டவுடன் அதிரடியாக ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய மக்கள் நலன் போராட்டத்தின் மூலமாகவே இயங்குகின்றது, திமுகவின் நிழலில் இல்லை. எப்போதும் நாங்கள் மதவெறிக்கு எதிராக, மக்கள் நலனுக்காக போராட்டத்தை முன்னெடுப்போம். இடதுசாரி ஒற்றுமையை கையில் எடுப்போம். என்று அதிரடியாக பேட்டி அளித்தது திமுகவினர் இடையே கோபத்தை கிளப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மாநாடு மூலம் முதல் முறையாக திமுக கூட்டணிக்குள் ஒரு எதிர்ப்பு குரல் முரணுக்கான பிரச்சாரம் தொடங்கியுள்ளது என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: அடிப்படை கொள்கை மீறி திமுகவுடன் 8 ஆண்டுகள் கூட்டணி...மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல்...தொண்டர்கள் சரமாரி கேள்வி...