கடந்த 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பதிவுகளை வழங்க கோரிய மத்திய தகவல் ஆணையம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு தொடர்பான விவரங்களை வழங்கும்படியும் குறிப்பாக அவருடன் படித்தவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவரங்களை வழங்குமாறு மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கு நேற்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் மத்திய அரசின் தலைமை வக்கீல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தின் போது, "பொதுமக்களின் நலனையும் பொது நலனையும் ஒன்றாக கருத முடியாது. பொதுமக்கள் ஏதாவது ஒன்றில் ஆர்வம் காட்டலாம். ஆனால் அது பொது நலனாக இல்லாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில் ஏதேனும் பொது நலன் உள்ளதா என்றால் இல்லை என்பதே எனது பதிலாகும்" என கூறினார்.
இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..
"பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை ஒரு நம்பிக்கைக்கு உரிய முறையில் பல்கலைக்கழகம் வைத்திருந்தது. பொது நலன் இல்லாத நிலையில் வெறும் ஆர்வத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யாருக்கும் தனிப்பட்ட தகவல்களை தேடுவதற்கு உரிமை இல்லை" என்றும் அவர் வாதிட்டார். மேலும் அவர், "தற்போதைய வழக்கு ஒரு பரபரப்பான வழக்கு ஆகும். அது பொது நலன் சார்ந்ததாக இல்லாவிட்டால் தனித்தன்மை கொண்ட தகவல்களை மறுக்க பல்கலைக்கழகம் கடமைப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி என்பது தனிப்பட்டதாக கருதப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்றும் அவர் வாதிட்டார். இதற்கிடையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் உரிமை கோரியவரின் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே, தனது எதிர்வாதத்தில், "இதுபோன்ற தகவல்கள் பொது தகவல்களாக கருதப்பட்டு அறிவிப்பு பலகைகள் மற்றும் செய்தித்தாள்களில் காட்டப்படும்" என்று கூறினார்.
"இந்த தகவலின் அடிப்படையில் தான் மக்கள் முடிவு எடுக்கிறார்கள். திருமண முடிவுகள் கூட.. அவர்கள் பட்டதாரிகளா? இல்லையா? என்பதை பொறுத்துதான் எடுக்கப்படுகின்றன. இது பழைய பட்டத்தை குறிக்கிறது என்பது அதை மீண்டும் வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்காது" என்றார். மேலும் ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தோல்வி அடைந்து இருந்தாலும் அதை வெளியிடுவதில் நிச்சயமாக பொது ஆர்வம் உள்ளது என்றும் ஹெக்டே தனது வாதத்தின் போது அழுத்தமாக குறிப்பிட்டார்.

19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு: "தகுதி தேவைப்படும் அலுவலகங்களும் தகுதி இல்லாத அலுவலகங்களும் இருக்கலாம். பொது நலன் வெளிப்படுத்தலையும் மறைப்பதையும் சார்ந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை வகிக்கும் மக்களின் பொது நலன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் உட்பட பல விஷயங்களை வெளிப்படுத்துவதை கூறுகிறது. ஒரு நபரின் கல்வி தகுதி குறித்து கேள்வி வரும்போது ஒரு பொது அதிகார மன்றம் என்ன செய்ய வேண்டும் ?என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார். இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், வருகிற 19-ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: 3 நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி... ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்...