''அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனி நபர்களை விட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தை விட சமூகம் பெரியது'' என பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு அக்கட்சி பொருளாளர் திலகபாமா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ''கட்சியில் நடவடிக்கைகளுக்காக தானே தலைவராக பொறுப்பேற்பதாகவும், அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்'' என தன்னிச்சையாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, ''பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின் அன்பை ருசித்தவள் நான். ராமதாஸ் அய்யா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, ஆனால் இந்த முடிவு தவறு. 'அன்பு'தானே எல்லாம்.

திண்டிவனத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீடு முன்பாக, அன்புமணியின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராட்டம் நாடத்தி வருகின்றனர். பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் டாக்டர் ராமதாஸுடன் நேருக்கு நேராக, அன்புமணியை டிஸ்மிஸ் செய்ததற்கு எதிராக வாக்குவாதம் செய்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: பாஜகவா..? அதிமுகவா..? நாடக அரசியல் நடத்தும் ராமதாஸ்..! வன்னியரசு ஆவேசம்
அன்புமணி அவரது தந்தை ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பாமகவில் பிரளயத்தை கிளப்பி இருக்கிறது. 2024 டிசம்பர் 28 அன்று புதுச்சேரியில் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டது. கட்சியின் இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை நியமிக்கும் முடிவு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ராமதாஸ், கட்சியின் நிறுவனராக, முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். ஆனால், அன்புமணி, கட்சியின் தலைவராக, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது சரியல்ல. களத்தில் அனுபவமுள்ளவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி இது. என் முடிவை ஏற்காதவர்கள் வெளியேறலாம்" என்று கடுமையாக கூறினார்.

இந்த வார்த்தைப் போர் மேடையிலேயே நடந்ததால், கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி விரும்பிய நிலையில், அன்புமணியின் வற்புறுத்தலால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்ததால், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்தன.

இந்த மோதலைத் தொடர்ந்து, டிசம்பர் 29, 2024 அன்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அன்புமணி செய்தியாளர்களிடம், "எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது இயல்பு" என்று கூறினார். ஜனவரி 2, 2025 அன்று ராமதாஸ், "எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. பிரச்னை பேசி தீர்க்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். இருப்பினும், அன்புமணி தனது தனி அலுவலகமான பனையூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் உள்ளன.