''சென்னை மாநகராட்சியில் கடை பலகைகளில் தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மேயர் பிரியா கூறி இருக்கிறார். மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா?'' என நாம் தமிழர் கடியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "9.5 லட்சம் கோடியாக தமிழ்நாட்டிற்கு கடன் தொகை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இவ்வளவு கடனை பெற்று என்ன செய்துள்ளது? பேருந்து கட்டணம், மின் கட்டணம், சொத்துவரி என எல்லா கட்டணமும் உயர்ந்துள்ளது.

நொய்யல் ஆறையே கொன்று விட்டு அதற்கு அருங்காட்சியகம் வைக்க போகிறீர்களா? ஈழத் தமிழர்களுக்கு 87000 ரூபாயில் வீடு கட்டி தர போவதாக அறிவித்துள்ளார்கள். 87 ஆயிரம் ரூபாயில் கழிவறைதான் கட்ட முடியும். வீடு கட்ட முடியாது. கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறியதில் என்ன செயல்பாட்டுக்கு வந்துள்ளது? தேர்தல் வருவதால் இது போன்ற அறிவிப்புகளை அறிவிக்கிறார்கள்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ1 லட்சம் கோடி ஊழல்: திமுகவை காப்பாற்றும் பாஜக..? கொளுத்திப்போடும் சீமான்..!
கல்விக்கு தமிழக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கல்விக்கு அவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அது எங்கு போய் சேருகிறது என்று தெரியவில்லை. அமைச்சர்கள்தான் தனியார் பள்ளிகளை நடத்துகிறார்கள். மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லை. ரூபாயில் வரும் 'ரூ' என்பது தமிழ் எழுத்து இல்லை. 'ர' என்ற எழுத்து தமிழில் துவங்காது. அப்படி இருக்கும்போது அதை தமிழ் எழுத்து என்று கூறுவதா? முதலில் திமுகவில் உள்ள ஒருவரையாவது தமிழை பேசச்சொல்லுங்கள்..?

சென்னை மாநகராட்சியில் கடை பலகைகளில் தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மேயர் பிரியா கூறி இருக்கிறார். மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா? தமிழ் பேசவே வரவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கக்கூடிய நிலை உள்ளது. உங்கள் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி பாடமாக இருக்கிறது. பாஜக மாநில அமைச்சர்கள் ஆளும் மாநிலங்களில் கூட, அம்மாநில மொழிக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கர்நாடகாவில் கூட சித்தராமையா கன்னடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை.

தம்பி விஜய்க்கு ஒய் பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை. விஜய் மாதிரி ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொது வெளியில் வரும் போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை. அவருக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால் கொடுக்கலாம். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான்தான் நாட்டுக்கு பாதுகாப்பு" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமான் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டம்... நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது சென்னை ஐகோர்ட்..!